Published : 29 Aug 2020 05:13 PM
Last Updated : 29 Aug 2020 05:13 PM

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட 30% மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: தமிழ்வழிக் கல்வியைக் காட்டிலும் ஆங்கில வழிக்கல்வியில் சேர ஆர்வம்

மதுரை இளங்கோ மாநகராட்சிப் பள்ளி

மதுரை

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தற்போது வரை 30 சதவீதம் மாணவர் சேர்க்கை கூடியுள்ளது. ஆனால், தமிழ் வழிக் கல்வியைக் காட்டிலும் ஆங்கில வழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கிறது.

மதுரை மாநகராட்சியில் 26 தொடங்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள், 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாநகராட்சிப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு கரோனாவால் கடந்த வாரம் முதலே மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பொதுவாக கடந்த 20 ஆண்டாக கல்வியில் மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆதிக்கம் அதிகரித்தது. நடுத்தர, ஏழை மக்கள் கூட தங்கள் குழந்தைகளை ஆங்கிலப்பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டினர்.

அதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வந்தததால் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகி, பல பள்ளிகள் மூடப்பட்ட வரலாறும், பல பள்ளிகளில் ப்ளஸ்-1 வகுப்பில் சில பாடப்பிரிவுகளை நீக்கும் அளவிற்கு அரசுப் பள்ளிகள் நிலை சென்றது. சில அரசுப் பள்ளிகளில் ஒரே மாணவருக்கு ஒரு ஆசிரியர் வகுப்பெடுக்கும் அவலமும் நடந்தது. இதற்கும் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளும் தப்பவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா தொற்று நோய் நடுத்த, ஏழை மக்கள் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. ஏராளமானோர் வேலைவாய்ப்பு இழந்து ஆன்றாட வாழ்வாதாரத்திற்கே சிரமப்படுகின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறைக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வழக்கம்போலவே ஒரே தவனையில் கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதனால், குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் திண்டாடுகின்றனர். அதனால், இந்த ஆண்டு பரவலாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வருகிறது.

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை கூடியுள்ளது. மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டு தமிழ் வழி கல்வியில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் 150 மாணவர்கள், 326 மாணவிகள் உள்பட மொத்தம் 476 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

ஆங்கில வழிக் கல்வியில் 851 மாணவர்களும், 2044 மாணவிகளும் உள்பட மொத்தம் 2895 பேர் சேர்ந்துள்ளனர். தமிழ் வழி மற்றும் ஆங்கில கல்வி வழியை சேர்த்து மொத்தம் தற்போது வரை மாநகராட்சிப்பள்ளிகளில் 1001 மாணவர்களும், 2370 மாணவிகளும் என மொத்தம் 3371 பேர் சேர்ந்துள்ளனர்.

வழக்கமாக கடந்த காலத்தில் மாநகராட்சிப்பள்ளிகளில் ஆண்டுதோறும் 2,000 முதல் 2,500 பேர் வரை மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர். ஆனால், தற்போது வரை 3371 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடக்கிறது.

மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் சேருவதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒரே நேரத்தில் அனைவரும் குவிந்துவிடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடக்கிறது. கரோனா பாதிப்பால் பெற்றோரால் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை என்பதால் மாநகராட்சி மாணவர் சேர்கைக்கு அதிகரித்தது ஒரு காரணம் என்றாலும், தற்போது மெட்ரிக் பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளும் தற்போது மாநகராட்சிப்பள்ளிகளில் கிடைக்கிறது.

கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ப்ளஸ்-1, ப்ளஸ்-டூ மாணவர்களுக்காக ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள், ரோபாட்டிங் ஆய்வகங்கள், நவீன விளையாட்டு மைதானங்கள், ஜேசிஐ மற்றும் நீட் பயிற்சிக்கு தனி வகுப்புகள், நவீன கழிப்பறை வசதிகள், சுகாதாரமான குடிநீர் வசதிகள் என மாநகராட்சி நிர்வாகம் கல்விக்காக கடந்த ஒன்றரை ஆண்டாக அதிகளவு நிதி ஒதுக்கி மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்தியுள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் விசாகன், தனிப்பட்ட முறையில் கவனம் மேற்கொண்டு தனியார் கார்பரேட் நிறுவனங்கள் மூலம் மாநகராட்சிப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அதனால், தற்போது தனியார் பள்ளிகளை விட மதுரை மாநகராட்சிப் பள்ளிகள் கட்டிட வசதியிலும், கல்வித்தரத்திலும் உயர்ந்து நிற்கிறது.

இதுவும் மாணவர் சேர்க்கை உயர்வுக்கு முக்கியக் காரணம். சமீப காலமாகவே தமிழ்வழிக் கல்வியைவிட ஆங்கில வழிக் கல்வியிலே ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக நடக்கிறது. கடந்த சில ஆண்டாக மாணவர் சேர்க்கையை ஒப்பிடும்போது மாணவர்களை விட மாணவர்கள் அதிகம் சேருகின்றனர், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x