Published : 29 Aug 2020 02:18 PM
Last Updated : 29 Aug 2020 02:18 PM

மருத்துவப் படிப்புகளில் கூடுதலாகப் பெருந்தொற்று மேலாண்மை: இந்திய மருத்துவக் கவுன்சில் அறிமுகம்

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் பெருந்தொற்று மேலாண்மைப் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஏராளமான உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. எல்லாத் துறைகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று 34 லட்சத்தைக் கடந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவப் படிப்புகளில் பெருந்தொற்று மேலாண்மைப் பாடம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பாடத்திட்டத்தை மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை முன்னாள் இயக்குநரும் மருத்துவருமான அவினாஷ் சுபே, எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

புதிய பாடத்திட்டம் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளதாவது:

''தொற்று மேலாண்மை குறித்த பாடத்திட்டத்தின் மூலம் எம்பிபிஎஸ் மாணவர்கள், நோயாளிகளின் உடல்நலக் குறைவைப் போக்க மட்டுமல்லாமல், பிற நோய்களால் ஏற்படும் சமூக, சட்ட ரீதியான மற்றும் பிற பிரச்சினைகளைக் கையாளவும் அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கோவிட்-19 மற்றும் உலகம் முழுக்க கரோனா தொற்றுநோய் பரவிய விதம் ஆகியவை இத்தகைய திறன்கள் நம்முடைய பட்டதாரிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.

புதிய மற்றும் வளர்ந்து வரும் தொற்று நோய்களைப் புரிந்துகொள்ளவும், ஆய்வு செய்யவும், சிகிச்சையளிக்கவும், தடுக்கவும் மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவுவதே இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம். படிப்படியாக இந்தப் பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இதில் நோய்/ தொற்று மேலாண்மை, அபாயக்கட்ட சிகிச்சை முறை, ஆய்வு மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுடன் பெருந்தொற்றுக் காலத்தில் ஊடகங்களிடம் எப்படிப் பேசுவது என்றும் கற்பிக்கப்படும்.

இதன்மூலம் ஒரு மருத்துவப் பட்டதாரி மருத்துவராக மட்டுமல்லாது, தலைவராகவும் குணப்படுத்துபவராகவும் இருப்பார். பெருந்தொற்று மேலாண்மை பாடத்திட்டத்தோடு தொற்றுக் காலகட்டத்தில் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் குறித்தும் நிபுணர்கள் பாடத்திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். அதுவும் விரைவில் வெளியிடப்படும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x