Published : 29 Aug 2020 12:27 PM
Last Updated : 29 Aug 2020 12:27 PM

ஜேஇஇ தேர்வர்களுக்கு இலவசப் போக்குவரத்து, தங்குமிடம்: ஒடிசா அரசு அறிவிப்பு

ஜேஇஇ தேர்வர்களுக்கு இலவசமாகப் போக்குவரத்து மற்றும் தங்க வசதிகள் செய்து தரப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாநிலத் தலைமைச் செயலாளர் ஏ.கே.திரிபாதி வெளியிட்டுள்ளார்.

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும் நடத்தப்படும் என தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது. ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜேஇஇ தேர்வர்களுக்கு இலவசமாகப் போக்குவரத்து மற்றும் தங்க வசதிகள் செய்து தரப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலத் தலைமைச் செயலாளர் ஏ.கே.த்ரிபாதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மாநிலம் முழுவதும் 26 தேர்வு மையங்களில் 37 ஆயிரம் பேர் ஜேஇஇ தேர்வெழுத உள்ளனர். மாநிலத்தில் பெருந்தொற்று காலம் மற்றும் வெள்ளம் ஆகிய காரணங்களை முன்னிட்டு ஜேஇஇ தேர்வர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு இலவசமாகப் போக்குவரத்து மற்றும் தங்க வசதிகள் செய்து தரப்பட உள்ளna.

மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வர். எனினும் மாணவர்கள் தங்களின் பயண விவரங்களை முன்கூட்டியே ஐடிஐ முதல்வர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

மாணவர்கள் தேர்வு மையங்கள் உள்ள நகரத்தை நோக்கிச் செல்ல, தங்களின் ஹால் டிக்கெட்டுகளைக் காண்பித்தால் போதுமானது. அவர்கள் பயணிக்கத் தேவையான அனுமதி கிடைக்கும்.

மாணவர்களுக்கும் அவர்களின் பாதுகாவலர்களுக்கும் பேருந்து வசதிகளை அரசு இலவசமாக வழங்கும். அரசு மற்றும் தனியார் ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளின் விடுதிகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளலாம் ''என்று திரிபாதி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x