Published : 29 Aug 2020 07:18 AM
Last Updated : 29 Aug 2020 07:18 AM

சட்டவிரோதமாக பாடநூல் அச்சிடல் விவகாரம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த என்சிஇஆர்டி முடிவு

சென்னை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளுக்கான பாட நூல்களை அச்சிட்டு வழங்கும் பணிகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள கஜ்ரவுலா பகுதியில் என்சிஇஆர்டி பாடநூல்கள் உரிய அனுமதியின்றி அச்சடிக்கப்பட்டதை அம்மாநில சிறப்பு அதிரடிப்படை சமீபத்தில் கண்டறிந்தது. இந்த புத்தகங்கள் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாடநூல் விநியோகஸ்தர்கள் சிலர் கூறும்போது, ‘‘முழு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மட்டுமே என்சிஇஆர்டி நேரடியாக புத்தகங்களை விநியோகம் செய்கிறது. இதர பள்ளிகள் என்சிஇஆர்டி அனுமதி பெற்ற ஒப்பந்த நிறுவனங்கள் வழியாகவே புத்தகங்களைப் பெற வேண்டும்.

புத்தக விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதால் அந்த பள்ளிகள் தனியார் விற்பனை மையங்களை நாடுகின்றன. மேலும், மத்திய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் என்சிஇஆர்டி புத்தகங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன.

என்சிஇஆர்டி புத்தகங்களுக்கு அதிக தேவை உள்ளதால், சில விநியோகஸ்தர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்க பாடப் புத்தகஅச்சிடுதலை தேவைக்கேற்ப என்சிஇஆர்டி மேற்கொள்ள வேண்டும்” என்றனர். இதுதொடர்பாக என்சிஇஆர்டி மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளிகளுக்கு தேவையான அளவு புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அதில் எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படுவதில்லை. எனினும், மாநிலங்கள் அளவில் பாடநூல்கள் அச்சிடல் மற்றும் விநியோக பணிகளை தீவிரமாக கண்காணிக்க முடிவாகியுள்ளது. இதற்காக பிரத்யேக சிறப்பு குழுக்களும் அமைக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x