Published : 29 Aug 2020 06:53 AM
Last Updated : 29 Aug 2020 06:53 AM

கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அகமதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடுவதற்கு அதிருப்தி: குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் அளிக்க பேராசிரியர்கள் யோசனை

சென்னை

கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அகமதிப்பீடு அடிப்படையில் முழு மதிப்பெண்ணை கணக்கிட்டு வழங்குமாறு அரசு கூறியுள்ளதற்கு பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதற்கு பதிலாக, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கலாம் என்று அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழல்உள்ளதால், கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளின் 1, 2-ம் ஆண்டு மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளின் 1, 2, 3-ம்ஆண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வில் (செமஸ்டர்) இருந்து தமிழக அரசு விலக்கு அளித்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த 26-ம்தேதி இரவு புதிதாக வெளியிடப்பட்ட அரசாணையில், இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து பருவத்தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இறுதி பருவத்தேர்வு நீங்கலாக இதர பருவத்தேர்வுகளுக்கு தேர்வுக் கட்டணம்செலுத்தியுள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால், அவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும் என்பது தெரியாமல் இருந் தது.

இந்நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களின்அகமதிப்பீடு மதிப்பெண்ணை (Internal Mark) 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு பருவத்தேர்வுகளுக்கு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்வு முடிவுகளை வெகுவிரைவில் வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக, கலை, அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை, இளங்கலை படிப்பில் ஒவ்வொரு பாடத்திலும் தேர்வுக்கு 75 மதிப்பெண் வழங்கப்படுகிறது. வருகை பதிவு, செமினார் பங்கேற்பு, அசைன்மென்ட்டுக்கு தலா 5 மதிப்பெண், வகுப்பு தேர்வுக்கு 10 மதிப்பெண் என அகமதிப்பீட்டுக்கு 25 மதிப்பெண் அளிக்கப்படுகிறது. தேர்ச்சி பெற 100-க்கு 40 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

முதுகலை படிப்பில், தேர்வுக்கு 60 மதிப்பெண் வழங்கப்படுகிறது. வகுப்பு தேர்வுக்கு 30 மதிப்பெண்,செமினார் பங்கேற்பு, அசைன்மென்ட்டுக்கு தலா 5 மதிப்பெண் என அகமதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் அளிக்கப்படுகிறது. தேர்ச்சி பெற 100-க்கு 50 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குபொதுத் தேர்வு நடத்த முடியாததால், தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களது காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்ணுக்கு 80 சதவீதம், வருகைப் பதிவுக்கு 20 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.

ஆனால், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்காமல் அவர்களது அகமதிப்பீட்டு மதிப்பெண்ணை அப்படியே 100-க்கு மாற்றி கணக்கிடும் முடிவுக்கு கல்வியாளர்கள், பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:

கரோனா தொற்றால் பருவத் தேர்வு நடத்த இயலவில்லை. எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பது நியாயமானது. ஆனால், அகமதிப்பீட்டு மதிப்பெண்அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது சரியல்ல.

பொதுவாகவே, அனைத்து மாணவர்களுக்கும் அகமதிப்பீட்டு மதிப்பெண் முழுமையாகவே வழங்கப்படும். வெகு சிலருக்கு 1, 2, 3 மதிப்பெண் குறைக்கப்படலாம். அதிகபட்சம் 5 மதிப்பெண்ணுக்கு கீழ் யாருக்குமே குறைக்கப்படாது. எனவே, அகமதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கினால், பெரும்பாலான மாணவர்களுக்கு 90 மதிப்பெண் வந்துவிடும். இவர்கள் தேர்வே எழுதாமல் 100-க்கு90 மதிப்பெண் பெற்றால், ஏற்கெனவே கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதி 70, 80 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

எனவே, பருவத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கிவிட்டு, அவர்கள் விரும்பினால் மீண்டும் தேர்வு எழுதி மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு அளிக்கலாம். அதுவே சரியான நடைமுறையாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x