Last Updated : 27 Aug, 2020 02:21 PM

 

Published : 27 Aug 2020 02:21 PM
Last Updated : 27 Aug 2020 02:21 PM

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை மேலும் தாமதிக்கக் கூடாது: 150 கல்வியாளர்கள் பிரதமருக்குக் கடிதம்

ஜேஇஇ மெயின் மற்றும் நீட் ஆகிய நுழைவுத் தேர்வுகளை மேலும் தாமதிக்கக் கூடாது என்று 150 கல்வியாளர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் செப்டம்பர் 13-ம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்காக ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.

கரோனா தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கரோனா காலத்திலும் தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஜேஇஇ மெயின் மற்றும் நீட் தேர்வுகளை நடத்த மேலும் தாமதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை விட்டுக்கொடுப்பதாக அமையும். தங்களின் சொந்த அரசியல் நோக்கத்துக்காக சிலர் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயல்கின்றனர். இதற்காக அரசை எதிர்க்கின்றனர். இளைஞர்களும் மாணவர்களுமே நாட்டின் எதிர்காலம். கோவிட்-19 பெருந்தொற்றால் அவர்களின் வருங்காலமும் நிச்சயமற்ற சூழலுக்கு மாறிவிட்டது.

மாணவர்கள் சேர்க்கை குறித்தும் வகுப்புகள் குறித்தும் நிறைய அச்சங்களைக் காண முடிகிறது. இவை விரைவில் சரிசெய்யப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டைப் போல, லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அடுத்த அடி எடுத்துவைக்க ஆவலுடன் வீட்டிலேயே காத்திருக்கின்றனர்.

ஜேஇஇ மெயின் மற்றும் நீட் தேர்வுத் தேதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் மீண்டும் தாமதம் செய்தால், மாணவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஓராண்டு முழுவதும் வீணாக வாய்ப்புள்ளது. எந்தக் காரணத்துக்காகவும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவுகளும் எதிர்காலமும் பலியாவதை அனுமதிக்க முடியாது.

இந்த நேரத்தில், ஜேஇஇ மெயின் மற்றும் நீட் தேர்வுகளை முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்''.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x