Published : 24 Aug 2020 08:12 PM
Last Updated : 24 Aug 2020 08:12 PM

மதுரை இடையப்பட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி: மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தமிழில் வாழ்த்து

மதுரை இடையப்பட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தமே 44 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே இருப்பதால், இவற்றில் பிள்ளைகளைச் சேர்க்கக் கடும் போட்டி நிலவுவது வழக்கம். குறைவான கட்டணமும் தரமான கல்வியும் வழங்கப்படும் கே.வி. பள்ளிகள் மாநிலம் முழுவதும் போதுமானதாக இல்லை என்று கூறி, கூடுதலாகக் கேந்திரிய பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்தக் கல்வியாண்டில் 4 புதிய கேந்திரிய பள்ளிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி கோவை, உடுமலைப்பேட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் பள்ளி தொடர்பான வேலைகள் தொடங்கின. இதில், மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கி, நடைபெற்றன.

இந்நிலையில் மதுரை இடையப்பட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், ''கேந்திரிய வித்யாலய சங்கதன் தனது 1,241-வது பள்ளியை இன்று தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் 'கேந்திரிய வித்யாலயா ITBP இடையப்பட்டி' என்ற பெயரில் திறந்துள்ளது. இப்பள்ளியின் மூலம் பயன் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் என் வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x