

கரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி கற்க வாய்ப்பு இல்லாத மாணவர்களும் கற்றலில் ஈடுபடும் வகையில், கற்றல் மேம்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதை மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.
பள்ளி மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் அனைத்தையும் என்சிஇஆர்டி தயாரித்துள்ளது. இவை மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இணையம் மற்றும் ஆன்லைன் கற்றல் உபகரணங்களைக் கொண்ட மாணவர்கள், போதிய அளவு ஆன்லைன் கல்விக்கான உபகரணங்கள் இல்லாதவர்கள், அறவே டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் இணைய வசதி இல்லாதவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் வகையினர் ஆன்லைன் கல்வி கற்க முடியாத சூழலில் உள்ள நிலையில், அவர்களுக்கெனத் தனித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் உதவியுடன் சமூக மையங்களில் கற்றல் உதவிகளை ஏற்படுத்துதல் மற்றும் மாணவர்களுக்கு உதவத் தன்னார்வலர்கள் குழுவை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள், புத்தகங்கள் போன்றவற்றை அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்குதல், தன்னார்வலர்கள் உள்ளூர் மாணவர்களுக்குக் கற்பித்தல், சமூக மையத்தில் தொலைக்காட்சி வசதியை ஏற்படுத்தி, உரிய தனிமனித இடைவெளியோடு ஆசிரியர்கள் கற்பித்தல் ஆகிய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
அதேபோலப் பஞ்சாயத்துகளில் உதவித் தொலைபேசி எண்ணை உருவாக்கி, பெற்றோரையும் கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபடுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கு முன்னதாக கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ ஆகிய பள்ளிகளில் என்சிஇஆர்டி ஆய்வு நடத்தியது.
கரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையன்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் இணைய வழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இச்சூழலில் ஆன்லைன் கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.