

கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அசாம் அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. கரோனா தொற்று இல்லாத ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப தயாராக இருக்க வேண்டும் என மாநில கல்வித் துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான கரோனா பரிசோதனை வரும் 21-ம் தேதி (நாளை) தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், அதன் பிறகு சுகாதார வழிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.