Published : 20 Aug 2020 07:33 AM
Last Updated : 20 Aug 2020 07:33 AM

‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கிய ‘உயர்வுக்கு உயர்கல்வி’; சட்டம் படித்தால் இளம் வயதிலேயே நீதிபதி ஆகலாம்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தகவல்

சென்னை

சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் சட்ட வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.

பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல்வேறு துறை வல்லுநர்கள் பங்கேற்று உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து உரையாற்றினர். அந்த வகையில், கடந்த 16-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சட்டப் படிப்புகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் பேசியதாவது:

சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி: முன்பெல்லாம்சட்டப் படிப்பு என்பது மாணவர்களின் கடைசி வாய்ப்பாக இருந்தது.ஆனால், தற்போது மாணவர்களும்,பெற்றோரும் விரும்பும் படிப்பாகமாறியுள்ளது. உரிமையற்றவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடி நியாயம் பெற்றுத்தர இப்படிப்பு உதவுகிறது. இந்தியாவில் 23 தேசிய சட்டப் பள்ளிகள் (நேஷனல் ஸ்கூல் ஆஃப் லா) உள்ளன. இங்கு ‘கிளாட்’ எனப்படும் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் 14 அரசு சட்டக் கல்லூரிகள், 2 தனியார் சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்புகள் உள்ளன. இதுதவிர, தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப் படிப்பை வழங்குகின்றன.

நம் நாட்டில் 20 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். சட்டம் படித்தால் நீதிமன்றங்களில் வாதாடுவது மட்டுமின்றி, நிறுவனங்களில் சட்ட ஆலோசகர்கள், சட்ட அலுவலர்களாக பணியாற்றும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வங்கிகள் போன்றவற்றுக்கு சட்ட ஆலோசகர்கள் தேவைப்படுகின்றனர். இன்ஜினீயரிங் கல்லூரிகளில் நடத்தப்படுவதுபோல, தற்போது தேசிய சட்டப் பள்ளிகளில் பெரிய நிறுவனங்கள் வந்து வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) நடத்தி, சட்டப் பட்டதாரிகளை பணிக்கு தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன.

சட்டம் படித்தவர்கள் ராணுவத்தில் ‘ஜேஏஜி’ (ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல்) என்ற பதவியில் 21 வயதில் சேர முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இளம் வழக்கறிஞர்கள் போட்டித் தேர்வு மூலம் நீதித்துறை நடுவர், சிவில் நீதிபதி, மாவட்ட நீதிபதி பதவிகளை இளம் வயதிலேயே அடையலாம். அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்யூட்டர் ஆகலாம். முதுகலை சட்டம் முடித்து, சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் ஆகலாம். யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் சட்டம் விருப்பப் பாடமாக உள்ளது. எனவே, சட்டம் படித்தவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகும் வாய்ப்புகளும் அதிகம்.

சென்னை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஸ்கூல் ஆஃப் லா வருகை பேராசிரியர் சி.ராபின்: அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு, 3 ஆண்டு சட்டப் படிப்புகள்உள்ளன. 5 ஆண்டு படிப்பில் 1,600 இடங்கள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 40 சதவீதம் தேவை. 3 ஆண்டு சட்டப் படிப்பில் 1,200 இடங்கள் உள்ளன. இதில் பட்டதாரிகள் சேரலாம். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் (School of Excellence in Law) 5 ஆண்டு, 3 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புகள் உள்ளன. 5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்பில் பி.ஏ. எல்எல்பி, பிபிஏ எல்எல்பி, பி.காம். எல்எல்பி, பிசிஏ எல்எல்பி என 4 விதமான சட்டப் படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 60 சதவீதம் தேவை. அரசு சட்டக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.1,060 மட்டுமே. இவ்வளவு குறைவான கட்டணத்தில் படிக்கும் தொழில்படிப்பு சட்டப் படிப்பு மட்டுமே.

அரசு சட்டக் கல்லூரிகள், சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

அதற்கு தற்போது ஆன்லைன் பதிவு நடந்து வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 4-ம் தேதி. இளம் சட்டப் பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி நீதித்துறை நடுவர் (ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்) பணியில் சேரலாம். தமிழக அரசு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் வாய்ப்பு உள்ளது.

வழக்கறிஞர் என்.ரமேஷ்: சமுதாய பணிக்கென்று இருக்கும் ஒரே படிப்பு சட்டப் படிப்பு. இது மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல. நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் சட்டம். ஆனால், இது பலருக்கு தெரிவதில்லை. சட்டம் சமுதாயத்தோடு நெருங்கிய தொடர்புடையது. பெண்களுக்கு சட்டக் கல்வி மிகப்பெரிய ஆயுதம். சமுதாயப் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவர்கள் வழக்கறிஞர்கள்தான். வழக்கறிஞர் பணியில் சிறந்து விளங்க தொடர் கற்றல் அவசியம். இலக்கியம், வரலாறு, பொருளாதாரம் என அனைத்து துறைகள் பற்றிய அறிவும் வழக்கறிஞர்களுக்கு தேவை. திறமை, அறிவை வளர்த்துக்கொண்டால் இத்துறையில் ஜொலிக்கலாம். புதுப்புது துறைகள் உருவாகி வருவதால் வழக்கறிஞர்களுக்கு வேலைவாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும்.

ஆதித்ய பிர்லா குழுமத்தின் துணை தலைவர் (மனித வளம்) டாக்டர் சி.சந்தானமணி: முன்பு இளங்கலை சட்டப் படிப்பு பி.எல். என்ற பெயரில் வழங்கப்பட்டது. தற்போது பி.ஏ. எல்எல்பி, பி.காம். எல்எல்பி, பிபிஏ எல்எல்பி, பிசிஏ எல்எல்பி என வெவ்வேறு பாடப் பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட விரும்புவோர் பி.ஏ. எல்எல்பி படிப்பை தேர்வு செய்வது நல்லது. சட்டம் முடித்துவிட்டு எம்எஸ்டபிள்யூ (மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க்) படித்தால் நிறுவனங்களில் மனிதவளப் பிரிவு (எச்ஆர்) மேலாளர் ஆகலாம். தொழிலாளர் நல அதிகாரி பணியில் சேரலாம். பி.காம். எல்எல்பி சேரும் மாணவர்கள் இன்னொருபுறம் சி.ஏ. அல்லது ஏசிஎஸ் பதிவுசெய்து, அதையும் பயிலலாம். பட்டப் படிப்பை முடிக்கும்போது அந்த தேர்விலும் தேர்ச்சி பெற்றால், நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். சட்டப் படிப்புக்கு பிறகு எம்பிஏ படிப்பதும் நல்லது. சட்டப் படிப்பு படிக்கும்போதே ஒரு விஷயத்தை எடுத்துரைக்கும் திறமை (Presentation Skill), யோசிக்கும் திறன், கணினி அறிவு, ஆங்கிலத்தில் பேசும் திறன் போன்ற திறமைகளை வளர்த்துக்கொண்டால் பின்னாளில் பயனுள்ளதாக இருக்கும். கருத்தரங்குகளில் பங்கேற்று கட்டுரைகள் சமர்ப்பிப்பது, மாதிரி நீதிமன்ற போட்டிகளில் (Moot Court Competition) பங்கெடுப்பதும் உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், மாணவர்கள், பெற்றோரின் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ பொது மேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார். இந்தநிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இணைந்து நடத்தியது. இந்த நிகழ்வோடு ‘உயர்வுக்கு உயர்கல்வி’ தொடர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அனைத்து நிகழ்வுகளையும் இணையத்தில் காணலாம்

‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த ஜூலை 24-ம் தேதி தொடங்கி நடந்துவந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று, அந்தந்த துறைகள் தொடர்பான படிப்புகள், அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து உரையாற்றினர். இவற்றில் பங்கேற்கத் தவறியவர்கள் கீழ்க்கண்ட யூ-டியூப், ஃபேஸ்புக் லிங்க் வழியே முழு நிகழ்ச்சிகளையும் காணலாம். துறை வாரியாக லிங்க் விவரம்:

துறை யூ-டியூப் லிங்க் ஃபேஸ்புக் லிங்க்
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் https://bit.ly/3gn76ui https://bit.ly/3g2lszh
ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், ரோபோடிக்ஸ் - ஆட்டோமேஷன் https://bit.ly/2PgDCm3 https://bit.ly/3h5ThRA
எம்பெடட் சிஸ்டம், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், சைபர் செக்யூரிட்டி https://bit.ly/315q56m https://bit.ly/2Q2dWdb
கட்டிடக் கலை, சிவில் இன்ஜினீயரிங் https://bit.ly/39RYY2O https://bit.ly/34bWcV5
கலை, அறிவியல் https://bit.ly/3fn1AGK https://bit.ly/2E8nCjK
மரைன் இன்ஜினீயரிங், ஓஷன் டெக்னாலஜி https://bit.ly/2D2R5vv https://bit.ly/2PZ16wz
ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் https://bit.ly/3iOSSn2 https://bit.ly/3hilox7
எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், என்விரான்மென்டல் இன்ஜினீயரிங் https://bit.ly/2Y8mBPS https://bit.ly/34c409l
பயோ-டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் https://bit.ly/3iRnkNp https://bit.ly/3iIl4Yy
கிளவுட் கம்ப்யூட்டிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் https://bit.ly/3iOBSND https://bit.ly/3gbHJuU
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை நடைமுறைகள் https://bit.ly/3g5VvyZ https://bit.ly/3h6vsca
வேளாண் அறிவியல் https://bit.ly/2Q0nDsM https://bit.ly/3iRH8Ai
கெமிக்கல், எலெக்ட்ரோகெமிக்கல் இன்ஜினீயரிங் https://bit.ly/31ZKc6n https://bit.ly/3avW0B6
அல்லைடு ஹெல்த் சயின்ஸ் https://bit.ly/2FwgE90 https://bit.ly/3h0ohlQ
ஃபேஷன் டிசைன் https://bit.ly/3iMhuwt https://bit.ly/2FyAxfB
தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை நடைமுறைகள் https://bit.ly/3g8v8bS https://bit.ly/3h8iydG
சட்டப் படிப்புகள் https://bit.ly/3auPlqR https://bit.ly/2YbbmWP

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x