Published : 17 Aug 2020 04:39 PM
Last Updated : 17 Aug 2020 04:39 PM

அம்மையநாயக்கனூர் அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கக் குவிந்த பெற்றோர்: முதல் மாணவனை மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள் 

அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் நாள் சேர்க்கையின் போதே 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்தனர்.

முதலில் சேர்ந்த மாணவனை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்று புத்தகங்களை வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அரசு பள்ளிகளிலேயே தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

இந்தப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளிலேயே அதிக எண்ணிக்கையான 380 மாணவர்கள் இந்த பள்ளியில் பயில்கின்றனர்.

கற்றல், மாணவனின் தனித்திறமையை ஊக்குவித்தல் ஆகியவற்றால் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக இப்பகுதியில் அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திகழ்கிறது.

இந்நிலையில் இன்று அரசு உத்தரவையடுத்து முதலாம் வகுப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. அம்மையநாயக்கனூர் மற்றும் இதன்சுற்றுப்புற கிராமமக்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.

மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல்நாளே 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். பள்ளியின் சிறப்பை அறிந்த பெற்றோர்கள் 15 க்கும் மேற்பட்டோர், தனியார் பள்ளிகளில் பயின்ற தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர்.

நடப்பு கல்வியாண்டில் முதலாவதாக சேர்ந்த மாணவனை பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் மற்றும் ஆசிரியர்கள் மாணவனுக்கு மாலை அணிவித்து வரவேற்று பாடப்பத்தகங்களை வழங்கினர். மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தப்பள்ளி தான் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. இந்த ஆண்டும் முதலிடத்தை தக்கவைக்க உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x