Last Updated : 16 Aug, 2020 11:07 AM

 

Published : 16 Aug 2020 11:07 AM
Last Updated : 16 Aug 2020 11:07 AM

வாட்ஸ்அப்-ல் ஆங்கிலப் பயிற்சி, பாடங்களை கற்பிக்க ‘யு-டியூப்’ சேனல்: கரோனா ஊரடங்கிலும் தடையின்றி கற்பிக்கும் டிஜிட்டல் அரசுப் பள்ளி

கரோனாவால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனாலும், மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது கோவை அருகே உள்ள ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியின் ஆசிரியர் குழுவினர், மாணவர்களை பல்வேறு விதங்களில் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். டிஜிட்டல் மயமான இப்பள்ளியின் மேம்பாட்டுக்காக பலமுன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் உதவிவருகின்றனர்.

இதுதொடர்பாக தலைமையாசிரியர் கோ.ரமேஷ் கூறியதாவது: கடந்த ஓராண்டுக்கும் மேலாக எங்கள் பள்ளிக்கென தனி இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. புதிதாக தற்போது ‘GHSS OKM விதைகள்’ என்ற யு-டியூப் சேனலை தொடங்கியுள்ளோம். அதில், பல்வேறு பாடங்கள், விளையாட்டு, யோகா, கலைப்பொருட்கள் தயாரிப்பு, ஓவியம் என எங்கள் பள்ளி ஆசிரியர்கள் காணொலிகளை உருவாக்கி, பதிவேற்றிவருகின்றனர். இந்தக் காணொலிகளை எங்கள் பள்ளி மாணவர்கள் உட்பட இதர அரசு பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.

ஊரடங்கு காலம் தொடங்கியது முதல் ‘Anglophonix’ ஆங்கில பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கே.ரத்தினசபாபதி உதவியுடன் 7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோக்கள் மூலம் இலவசமாக ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், முனைவர் பாலஜி சம்பத் உதவியுடன் ‘ஆஹா குரு’ என்ற செயலி மூலம் 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்தை எளிதாக புரிந்துகொள்ளும் பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டுவருகின்றன.

‘கூகுள் கிளாஸ் ரூம்’ மூலம் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை நடத்திவருகிறோம். இதன்மூலம் ஆன்லைனில் கேள்விகளை அனுப்பி தேர்வுகளையும் நடத்துகிறோம். ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்த ‘கூகுள் மீட்’ செயலியை பயன்படுத்துகிறோம். மற்ற வகுப்பு மாணவர்களுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ஆசிரியர்கள் பாட குறிப்புகளை பதிவேற்றம் செய்து, மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்துவருகின்றனர்.

பெற்றோர் நேரடியாக பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கும் நோக்கில், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை முன்பதிவை இணையதளம் மூலம் தொடங்கினோம். இதன்மூலம் இதுவரை 60 பேர் விண்ணப்பித்துள்ளனர். மற்ற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் படிவங்களையும் ஆன்லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x