Published : 15 Aug 2020 08:21 PM
Last Updated : 15 Aug 2020 08:21 PM

ஐஏஎஸ் ஆன மாற்றுத்திறனாளி பூரண சுந்தரி: படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராகத் தேசியக் கொடியேற்றினார்

மதுரை

தடைகளை உடைத்து ஐஏஎஸ் ஆகிச் சாதித்த மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பூரண சுந்தரியை அவர் படித்த பள்ளி நிர்வாகம், சிறப்பு விருந்தினராக சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து தேசியக் கொடியேற்ற வைத்துக் கவுரவப்படுத்தியது. விழாவில் அவருக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும், அவரும் உருக்கமாகச் சந்தித்து உரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வெளியான இந்திய குடிமைப்பணிகள் தேர்வு முடிவில் மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியை சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி என்ற தம்பதியினரின் பார்வை சவால் கொண்ட(பார்வையற்ற மாற்றுத்திறனாளி) மகளான பூரண சுந்தரி என்பவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார். பூர்ண சுந்தரியின் 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் அவர் தனது பார்வையை முழுமையாக இழந்தவர். ஆனாலும், தன்னம்பிக்கையோடு தனது கல்வியைத் தொடர்ந்துள்ளார்.

இவர், காளவாசல் அருகே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள கேஎன்பிஎம் எம்பிஎஸ் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி IEDSS-ல் சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ் பயின்றார். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 471 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1092 மதிப்பெண்களும் பெற்றார். கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இலக்கியம் படித்தவர், தற்போது ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வு பெற்று படித்த பள்ளிக்கும், மதுரைக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது இந்த வெற்றி, மாற்றுத்திறன் மாணவர்களுக்குத் தங்களாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

இந்நிலையில் பூரண சுந்தரியை, அவர் படித்த சம்மட்டிபுரம் கேஎன்பிஎம் எம்பிஎஸ் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம், இன்று நடந்த சுதந்திர தினவிழாவில் அழைத்து தேசியக் கொடியேற்ற வைத்துக் கவுரவப்படுத்தியது.

பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் கே.சண்முகவேல் தலைமையில், நிர்வாகக் குழுச் செயலாளர் எஸ்.முருகன், பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.சாந்தி, பள்ளி நிர்வாகக் குழுப் பொருளாளர் எம்.கல்யாணசுந்திரம், துணைச் செயலாளர் எம்.எஸ்.பொன்னுத்துரை, துணைத்தலைவர் எஸ்.பழனி மற்றும் ஆசிரியர்கள் பூரண சுந்தரியை வரவேற்று நினைவுப் பரிசு வழங்கி கவுரவப்படுத்தினர்.

விழாவில், அவருக்கு கல்வி கற்றுக் கொடுத்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அவரை ஐஏஎஸ் அதிகாரியாகப் பார்த்து பெருமிதம் கொண்டனர். அவரும், தான் ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்குத் தான் படித்த இந்த பள்ளியும், அதன் ஆசிரியர்களும்தான் முதற்காரணம் என்று உருக்கமாகப் பேசினார்.

பூரண சுந்தரியும், அவருக்குக் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும் நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்து உரையாடிய அந்த நிகழ்வு மற்ற ஆசிரியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு பூரண சுந்தரி, தான் படித்த வகுப்புகளுக்கு ஆசிரியர்களுடன் சென்று அவரது இருக்கையில் அமர்ந்து ஆசிரியர்களுடன் தன்னுடைய பள்ளி கால மறக்க முடியாத நிகழ்வுகளைச் சொல்லி மகிழ்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x