Published : 13 Aug 2020 08:20 AM
Last Updated : 13 Aug 2020 08:20 AM

விமானவியல் குறித்த இணைய வழிகாட்டி நிகழ்ச்சி; வெளிநாடு செல்வதுபோல் நிலவுக்குச் செல்லலாம்!- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

சென்னை

கரோனா ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து ‘பறக்கலாம் வாங்க’ எனும் விமானவியல் துறை தொடர்பானநிகழ்ச்சியில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற 5-வது நாள் அமர்வில், ‘விண்வெளி: கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு’ குறித்து இஸ்ரோ செயற்கைக்கோள் முன்னாள் மைய இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். அவர் கூறியதாவது:

பேரண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிறிய நட்சத்திரம்தான் சூரியன். விண்வெளி அறிவியலைப் புரிந்துகொள்ள கோள்களின் சுற்றுப் பாதை, செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை வாகனங்கள், வடிவமைப்பு மற்றும் செயல்பாடு மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

இடைவிடாமல் செயலாற்றிக் கொண்டிருப்பது விண்வெளி ஆராய்ச்சித் துறை. இந்த கரோனா காலத்திலும் பூமி கோளைச் சுற்றி விண்வெளியில் 2000 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுஉள்ளன. ஸ்பேஸ-எக்ஸ் என்ற தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனம் 42 ஆயிரம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய அரசும் விண்வெளி ஆராய்ச்சியில் தனியாருக்குக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளதால் இந்த வாய்ப்பை நம் இளைஞர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2028-ம் ஆண்டில் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை நிலவில் மனிதர்கள் தங்குவதற்கான முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா போன்ற வெளிநாட்டுக்குச் செல்வதுபோல் நிலவுக்குச் செல்லும் நாள் தூரம் இல்லை.

இனி வரும் காலத்தில் இத்துறையில் அநேக வேலைவாய்ப்புகள் உண்டாக இருக்கிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்தும் இத்துறைக்குள் கால் பதிக்கலாம். அல்லது மெக்கானிக்கல், இசிஇ, கணினி அறிவியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டயப் படிப்பு அல்லது பி.இ. அல்லது பி.டெக். அல்லது எம்.எஸ்சி. முடித்தவர்களும் நுழையலாம். மேற்கொண்டு முதுநிலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி முடித்தவர்களுக்கும் பல்வேறு பணிவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. https://www.isro.gov.in/careers என்ற இணையதளத்தைப் பின்தொடர்ந்தால் சரியான தகவல்களும் வழிகாட்டுதலும் கிடைக்கும். இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார் இத்துடன் ‘பறக்கலாம் வாங்க’ இணைய வழி 5 நாள் பயிலரங்கம் நிறைவடைந்தது.

‘வீடு தேடி வந்து பாராட்டிய விஞ்ஞானி!’

2019-ல் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தொலைந்துபோனது. அது நிலவின் தெற்குப் பகுதியில் எங்கே உள்ளது என்பதை மதுரையைச் சேர்ந்த ஐடி ஊழியரான சண்முக சுப்பிரமணியன், தன்னுடைய வீட்டில் இருந்தே கணினி வழி கண்டறிந்து புகழ் பெற்றார்.

‘பறக்கலாம் வாங்க' நிகழ்ச்சியில் அவர் பேசியது: லூனார் ரெக்கனசன்ஸ் ஆர்ப்பிட்டர் மூலம் நிலவின் 98% வரைபடத்தைப் பதிந்து இணையதளத்தில் நாசா வெளியிட்டு வருகிறது. இதை உன்னிப்பாகப் பல மாதங்கள் பின்தொடர்ந்து, விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை அடையாளம் கண்டு, நாசா விஞ்ஞானிகளுக்கு தெரியப்படுத்தினேன். நான் சரியாகக் கண்டுபிடித்ததாக நாசா அங்கீகரித்தது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என் வீடு தேடி வந்து என்னைப் பாராட்டினார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x