Published : 12 Aug 2020 05:46 PM
Last Updated : 12 Aug 2020 05:46 PM

நாங்கள் எல்லாம் குழந்தைகள் இல்லையா?- உணவுக்காக கேள்வி எழுப்பும் பழங்குடியினப் பிள்ளைகள்

“வணக்கம். என் பேரு சந்தியா. நான் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கிறேன். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் எல்லாம் மதிய உணவுக்கான சத்துணவுப் பொருட்கள் எல்லாம் கொடுத்திருக்கீங்க. எங்களை மாதிரி பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கிற குழந்தைகளுக்கு ஏன் இன்னும் எதுவுமே கொடுக்கலை... நாங்க எல்லாம் குழந்தைகள் இல்லையா?”

இந்தக் கேள்விகளுடன் ஒரு பழங்குடியினச் சிறுமி பேசும் காணொலிப் பதிவை வாட்ஸ்- அப்பில் பார்க்க நேரிட்டது. விசாரித்தபோது இதேபோன்று நிறைய பழங்குடியினப் பள்ளிப் பிள்ளைகள் உருக்கமாகப் பேசும் காணொலிகள் சமூக வலைதளங்களில் உலாவருவதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

விவகாரம் இதுதான். தமிழகம் முழுக்க 17 மாவட்டங்களில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்குகின்றன. ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைந்த விடுதிகள் சுமார் 368 உள்ளன.

பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முக்கியக் காரணம், பள்ளிகளிலாவது குழந்தைகளுக்கு வயிராற உணவு கிடைக்கும் எனும் நம்பிக்கைதான். உண்மையில் அரசும் இதற்காகப் போதிய நிதியை வழங்கவே செய்கிறது. ஒரு மாணவருக்கு உணவுப் பொருட்களுக்காக ஒவ்வொரு மாதமும் தலா ரூ. 900 முதல் ரூ.1,000 வரை ஒதுக்கீடு செய்கிறது அரசு.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக விடுதியுடன் கூடிய பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு மாணவ-மாணவிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இதனால், இப்பள்ளிகளில் பழங்குடியின மாணவர்களுக்குக் கிடைத்துவந்த உணவும் பறிபோயிருக்கிறது. கடந்த மார்ச் தொடங்கி இப்போது வரை இவர்களுக்கு இதுதான் நிலை. பல்வேறு மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினக் குழந்தைகள், வறுமையின் காரணமாகக் குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாறிவருகின்றனர் .

இந்த அவல நிலையைக் கண்ட இவர்களின் ஆசிரியர்கள், ‘பள்ளிகளைத் திறப்பது தாமதமாகும் நிலையில், இவர்கள் சாப்பிடுவதற்கு ஒதுக்கப்படும் உணவுப் பொருட்களையாவது தாருங்கள்’ என பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளுக்குக் கோரிக்கை மனு அனுப்பினர்.

இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை மூலம் இயங்கும் அத்தனை பள்ளிகளுக்குமான சத்துணவு ரேஷனை அந்தந்த மாணவர்களுக்கு வீடுகள்தோறும் சென்று சேர்க்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 15-ம் தேதி வாக்கில் அந்தந்த பள்ளிக் குழந்தைகளைப் பள்ளிக்கே வரவழைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர்.

ஆனால், மூன்று வேளையும் உணவு வழங்கக்கூடிய பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் துறை உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு ஒரு வேளை உணவுக்குக்கூட ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை என்பதுதான் துயரம். இந்தச் சூழலில்தான், தங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குமாறு பழங்குடியினக் குழந்தைகள் கோரிக்கை வைக்கும் காணொலிகள் சமூக ஊடகங்களில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வட மாவட்ட பழங்குடியினர் பள்ளி ஆசிரியை ஒருவர், “குழந்தைகளுக்கான உரிய உணவுப் படியை உடனே வழங்குமாறு கோரிக்கை வைத்தது நாங்கள்தான். அரசு பிற பகுதிகளைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது பாராட்டுக்குரியது என்றாலும், பழங்குடியின மாணவர்களின் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு இதுவரை வழங்காதது ஏன் எனத் தெரியவில்லை.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் காணொலிகள் வெளியானதைத் தொடர்ந்து, அவற்றை வெளியிட்டது யார் என்று உளவுத் துறை விசாரித்து மேலிடத்துக்குத் தகவல் அனுப்புகிறது. இதையெல்லாம் அவ்வளவு அக்கறையாகச் செய்கிறவர்கள் இந்தப் பிரச்சினையின் மூலம் என்ன என்று பார்த்து இந்தக் குழந்தைகளுக்கான உரிமையைப் பெற்றுத்தர முயற்சிக்கலாமே?

பழங்குடியினக் குழந்தைகள் மலையில் வசிப்பவர்கள். மற்றவர்களைவிட இவர்களுக்குப் பிரச்சினைகள் அதிகம். இவர்களுக்கு அல்லவா முதலில் உணவுப் பொருட்கள் வழங்கியிருக்க வேண்டும்?” என்று ஆதங்கத்துடன் சொன்னார்.

பழங்குடியினக் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படாதது குறித்து, ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப் பிரதேசத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது அந்தத் தகவலை உறுதி செய்தனர் அங்குள்ள பழங்குடியின மக்கள்.

பர்கூர் கொங்காடையைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தன்னார்வலர் இதுகுறித்து கூறும்போது, “கொங்காடை பள்ளியில் 200 பேர் படிக்கிறார்கள். இந்த விடுதியில் 50 பேருக்குத்தான் விடுதி ஒதுக்கீடு இருக்கிறது. அதை 100 பேராக உயர்த்தித் தரச் சொல்லி பல ஆண்டுகளாகக் கேட்கிறோம். இன்னமும் செய்து தரவில்லை. மீதி 150 பேருக்கு மதிய உணவு மட்டும் கிடைக்கிறது. இப்போது 150 மதிய உணவு மாணவர்களுக்குரிய ரேஷன் போன மாதம் கிடைத்துவிட்டது.

ஆனால், விடுதியில் இருக்கும் 50 மாணவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. இது என்ன நியாயம்? இங்கே குழந்தைத் தொழிலாளர் மீட்பு ‘சைல்டு லைன்’ பள்ளி மையங்கள் பல உள்ளன. அங்கெல்லாம் மதிய உணவிற்கான ரேஷன் படியை சமூக நலத்துறை கொடுத்துவிட்டது. பழங்குடியினக் குழந்தைகள் விஷயத்தில் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு?” என்றார்.

அரசின் செவிகளுக்கு இந்தச் செய்தி சென்றடையட்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x