Published : 12 Aug 2020 08:21 AM
Last Updated : 12 Aug 2020 08:21 AM

விமானவியல் குறித்த இணைய வழிகாட்டி நிகழ்ச்சி; புதுமையான யோசனைகள் இருந்தால் வானம் கூட எல்லை இல்லை!- ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விளக்கம்

சுவாரசியமான தொழில்நுட்பம் நிறைந்தவிமானத் துறையில் இளைஞர்கள் சாதிக்கப் புதுமையான யோசனைகள் இருந்தால் வானம்கூட எல்லை இல்லைஎன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF) உடன் இணைந்து நடத்திய ‘பறக்கலாம் வாங்க (லெட்ஸ் ஃபிளை)’ என்ற இணைய வழி வழிகாட்டி நிகழ்ச்சியில் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் இயக்குநரும் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானியுமான வி.டில்லிபாபு பேசினார்.

கரோனா ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து ‘பறக்கலாம் வாங்க’எனும் விமானவியல் துறை தொடர்பாக மூத்த அறிஞர்கள் பேசுகிறார்கள்.கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அமர்வில், ‘போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள்: கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு’ எனும் தலைப்பில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசினார் அவர் கூறியதாவது:

விமானம் பறக்க காற்றும் அழுத்தமும்தான் முக்கிய தேவைகள். விமானத்தின் வால் பகுதி திறந்து மூடக்கூடிய ஜன்னலைப் போன்ற அமைப்பில் இருக்கும். இதைத் திறந்து மூடி கட்டுப்படுத்துவதன் வழியாகத்தான் எந்ததிசையில் விமானம் பறக்க வேண்டும்என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஹெலிகாப்டரின் இறக்கை சுழன்றாலே அதுபறக்கத் தொடங்கிவிடும். ஹெலிகாப்டரை கட்டுப்படுத்திச் செலுத்த உதவுவது அதன் வாலில் இருக்கும் ‘ரோட்டர்’ எனப்படும் ஒரு விதமான சக்கரம்.

விமானவியலில் பல ஆராய்ச்சிகளை நமது டிஆர்டிஓ செய்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது வேளாண்மைக்குப் பயன்படும் வகையில் 1972-ம்ஆண்டில் ஓர் விமானம் வடிவமைக்கப்பட்டது. மொத்தத்தில் 19 விதமான போர்விமானங்கள், 3,000 போர் விமானங்கள், 5 விதமான போர் ஹெலிகாப்டர்கள், 800 போர் ஹெலிகாப்டர்களை இந்தியா தயாரித்துள்ளது. மேலும் ரூ.1000 கோடி செலவில் விமானவியல் திட்டங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. இதனால்பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.

செயற்கை நுண்ணறிவு, 3டி அச்சு தொழில்நுட்பம், பிக் டேட்டா, ஆளில்லா விமான தொழில்நுட்பம், சூரிய ஆற்றல் பேனல்கள் பொருத்தப்பட்ட விமானம் என பல புதிய தொழில்நுட்பங்கள் இத்துறையில் வளர்ந்து வருவதால் வாய்ப்புகளும் அதிகம்.

விமானத் துறையை பொருத்தமட்டில் விஞ்ஞானி, பொறியாளர், விமானி,ஸ்டார்ட் அப் நிறுவனர், ஆசிரியர் போன்ற பணி வாழ்க்கை பிரிவுகள் உள்ளன. விமானவியல் படித்தவர் மட்டும்தான் இத்துறைக்குள் நுழையமுடியும் என்றில்லை. மெக்கானிக்கல்,எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், சிவில், இன்ஸ்ட்ருமெண்டேஷன் அண்டு கண்ட்ரோல், மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் மெட்டலர்ஜி உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., முனைவர் பட்டம் படித்தவர்களும் கால்பதிக்கலாம். மருத்துவம் படித்தவர்களும் வரலாம்.

மாணவிகளை ஊக்கப்படுத்த டி.ஆர்.டி.ஓ. பிரத்தியேக உதவித்தொகைவழங்குகிறது. drdo.gov.in இணையதளத்தில் வரும் நவ.15-ம் தேதிக்குள் விண்ணப்பித்தால் நம் மாணவிகள் பலனடைய வாய்ப்பு உள்ளது. சுவாரசியமான தொழில்நுட்பம் நிறைந்த இத்துறையில் இளைஞர்கள் சாதிக்கப் புதுமையான யோசனைகள் இருந்தால் வானம்கூட எல்லை இல்லை. இவ்வாறு விஞ்ஞானி வி.டில்லிபாபு பேசினார்.

நிறைவாக, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x