

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற ஆக.20-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 1.48 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதில், 1.18 லட்சம் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
இணையதளம் மூலமே சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சரிபார்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சான்றிதழ் பதிவேற்றும் பணி ஜூலை 31-ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி வரை இணையதளத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக சந்தேகம் இருப்பின் 044-22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 16-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.