Published : 12 Aug 2020 07:15 AM
Last Updated : 12 Aug 2020 07:15 AM

வேளாண் பட்டதாரிகளுக்கு அரசுப் பணி வாய்ப்புகள் ஏராளம்: ‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் தகவல்

வேளாண் பட்டதாரிகளுக்கு எண்ணற்ற அரசுப் பணி வாய்ப்புகள் இருப்பதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் கூறினர்.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் தொடர்பான மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த 9-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் வேளாண் படிப்புகள் குறித்து நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.எம்.வாசகம்:

பி.எஸ்சி. விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பி.இ. வேளாண் பொறியியல் என பல்வேறு நிலைகளில் விவசாயம் சார்ந்த பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவசாயத்தில் டிராக்டர்கள், பண்ணைக் கருவிகள், சொட்டுநீர் பாசனம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு கைகொடுப்பது பி.இ. வேளாண் பொறியியல். தற்போது பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கவும், பயிர்களின் நிலையை ஆராயவும், ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வேளாண் சார்ந்த சிறிய, பெரிய பண்ணைக் கருவிகளை வடிவமைப்பது, உருவாக்குவதில் வேளாண் பொறியியல் முக்கிய இடம் வகிக்கிறது. அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம், காய்கறிகள், பழங்களை கெடாமல் பாதுகாக்கும் ‘கோல்டு ஸ்டோரேஜ்’ வசதி, டிரையர்கள் என வேளாண் பொறியியல் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. காய்கறிகள், பழங்கள், மலர்களை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் வேளாண்மை படித்தவர்களுக்கு இருக்கின்றன.

கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் அமிர்தா ஸ்கூல் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் சயின்சஸ் தலைவர் டாக்டர் சுதீஷ் மனலில்:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. விவசாயம் 4 ஆண்டு கால படிப்பாக வழங்கப்படுகிறது. அமிர்தாவில் பி.எஸ்சி. விவசாயம் (ஆனர்ஸ்) என்ற பெயரில் வழங்குகிறோம். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) விதிமுறைப்படியும், சர்வதேச தரத்துக்கு இணையாகவும் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேளாண் அதிகாரி, விதை அலுவலர், உதவி வளர்ச்சி அதிகாரி, வேளாண் விரிவாக்க அதிகாரி போன்ற பணிகளில் விவசாயப் பட்டதாரிகள் சேரலாம். பொதுத் துறை வங்கிகள், ஊரக வங்கிகள், நபார்டு வங்கியில் வேளாண் அதிகாரியாகவும் பணியில் சேரலாம். இதற்கு போட்டித் தேர்வு எழுத வேண்டும்.

மத்திய வேளாண் ஆய்வு நிறுவனங்களில் தொழில்நுட்ப அலுவலர், மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம், இந்திய உணவுக் கழகத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தேசிய விதைக் கழகத்தில் இளநிலை பயிற்சியாளர் என ஏராளமான பணி வாய்ப்புகளும் உள்ளன. ஐசிஏஆர் தேர்வு எழுதி, ஃபெல்லோஷிப்புடன் எம்.எஸ்சி. விவசாயம், அதன்பிறகு பிஎச்.டி. படிக்கலாம். அதுமட்டுமின்றி, சர்வதேச ஆய்வு நிறுவனங்களில் முழு உதவித் தொகையுடன் பிஎச்.டி. படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. பிஎச்.டி. முடித்து, வேளாண் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் ஆகலாம். வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் (ஏஎஸ்ஆர்பி) நடத்தும் தேர்வை எழுதி ஐசிஏஆர் ஆய்வு நிறுவனங்களில் வேளாண் விஞ்ஞானியாக பணியாற்றலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், மாணவ, மாணவிகள், பெற்றோரின் கேள்விகளுக்கு துறை நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது. இதில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/33JDrrP என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

பொறியியல் கலந்தாய்வு எப்படி இருக்கும்.. மாணவர் சேர்க்கை செயலாளர் விளக்கம்

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் டி.புருஷோத்தமன் கடந்த 9-ம் தேதி காலை நடந்த ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் பங்கேற்று, பொறியியல் கலந்தாய்வு நடைமுறைகள் குறித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை கடந்த 2 ஆண்டுகளாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (‘டோட்’) நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவு கடந்த ஜூலை 15-ல் தொடங்கி, நடந்து வருகிறது. ஆன்லைனில் பதிவுசெய்தவர்கள் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டிவிட்டது. வரும் 16-ம் தேதி வரை பதிவு செய்யலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்போர் தங்கள் ஐ.டி. அதாவது இ-மெயில், பாஸ்வேர்டு, விண்ணப்ப எண் ஆகியவற்றை தவறாமல் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கரோனா பரவல் காரணமாக சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலரும் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருப்பார்கள். செய்யாதவர்களுக்கு ஆகஸ்ட் 12 முதல் 20-ம் தேதி வரை மீண்டும் அவகாசம் அளிக்கப்படும். பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களில் (டிஎஃப்சி) ஆன்லைனில் அவை சரிபார்க்கப்படும்.
வழக்கமாக, மாற்றுத் திறனாளிகள், ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், தொழிற்கல்வி பிரிவினர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் நேரில் நடத்தப்படும். இந்த ஆண்டு அதுவும் ஆன்லைனிலேயே நடத்தப்படுகிறது.
ஆன்லைனில் வரும் 21-ம் தேதி ‘ரேண்டம் எண்’ (சமவாய்ப்பு எண்) வழங்கப்படும். தொடர்ந்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) வெளியிடப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒட்டுமொத்த ரேங்க், இடஒதுக்கீட்டு பிரிவு ரேங்க் என 2 ரேங்க் அளிக்கப்படும். ஆன்லைன் கலந்தாய்வுக்கு ஒட்டுமொத்த ரேங்க் அடிப்படையில்தான் வாய்ப்பு வழங்கப்படும்.

சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வுக்கு பிறகு, பொது கலந்தாய்வு தொடங்கும். இது ஒவ்வொரு சுற்றாக நடக்கும். ஒவ்வொரு சுற்றுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு சுற்று கலந்தாய்வு தொடங்கும்போது கல்லூரி, பாடப் பிரிவை தேர்வுசெய்ய குறிப்பிட்ட நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். ஒரு மாணவர் எத்தனை கல்லூரிகள், பாடப் பிரிவையும் வரிசைப்படி தேர்வு செய்யலாம். அதற்கு முன்பு ஆன்லைனில் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட கெடுவுக்குள் தங்கள் விருப்பத்தை ஆன்லைனில் லாக் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கணினியில் தானாகவே லாக் ஆகிவிடும். மறுநாள் காலை தற்காலிக ஒதுக்கீடு செய்யப்படும்.

இதில் முடிவெடுக்க மாணவர்களுக்கு 5 வாய்ப்புகள் தரப்படும். ‘ஒதுக்கப்பட்ட விருப்பம் ஓகே’, ‘இதை ஏற்கிறேன். வேறு கல்லூரிக்கு வாய்ப்பு இருந்தால் அதையும் பரிசீலிக்கலாம்’, ‘அடுத்த சுற்றுக்கு பரிசீலிக்கலாம்’, ‘ஒதுக்கப்பட்ட விருப்பம் வேண்டாம்’, ‘கலந்தாய்வில் இருந்து வெளியேறுகிறேன்’ - இந்த 5 வாய்ப்புகளில் ஒன்றை மாணவர்கள் 2 நாட்களில் உறுதிசெய்ய வேண்டும். அதன் பிறகே, கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை இறுதி செய்யப்படும். குறிப்பிட்ட கெடுவுக்குள் உறுதிப்படுத்தாவிட்டால் கலந்தாய்வு வாய்ப்பு பறிபோகும். எனவே, மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கலந்தாய்வு தொடர்பான தகவல் கள் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் அவ்வப்போது தெரிவிக்கப்படும். www.tneaonline.org என்ற இணையதளத்தையும் தினமும் பார்த்துவர வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் டிஎஃப்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பொது மேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/2XPUUvc என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x