

ஜார்க்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜஹர்நாத், அங்குள்ள அரசு உதவிபெறும் இடைநிலைக் கல்லூரியில் 11-ம் வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ளார்.
கற்கவும் அறிவு பெறவும் வயது தடையில்லை என்பார்கள். நாட்டில் ஆங்காங்கே சாதாரண மனிதர்கள் ,தங்களின் வயோதிக காலங்களில் மீண்டும் படிக்க முன்வரும் செய்தியை அனைவரும் கடந்திருக்கலாம்.
ஆனால் அரசியல்வாதியும் அமைச்சருமான ஜார்க்கண்டைச் சேர்ந்த ஜஹர்நாத் மாத்தோ, 11-ம் வகுப்பில் சேர அரசு உதவிபெறும் இடைநிலைக் கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார்.
53 வயதான அவர், 1995-ம் ஆண்டு 10-ம் வகுப்பை முடித்தார். பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனவரை, அரசியல் வரவேற்றது. படிப்படியாக உயர்ந்து தற்போது ஜார்க்கண்ட் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.
இதுகுறித்துப் பேசும் அவர், ''25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படிக்க உள்ளேன். வணிகப் பிரிவில் அரசியல் அறிவியல் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். 10-ம் வகுப்புப் படித்தவர் கல்வி அமைச்சரா என்று ஏராளமான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறேன். பொதுமக்கள் மட்டுமல்லாது கட்சிக்குள்ளேயும் என்னை விமர்சிக்கின்றனர்.
இதனால் மீண்டும் படிக்க முடிவெடுத்தேன். படித்துக்கொண்டே துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்வேன். கல்விக்கு வயது தடையில்லை'' என்றார் அமைச்சர் ஜஹர்நாத்.
ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவையில் சுகாதாரத்துறை, போக்குவரத்து, சமூக நலம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் 10-ம் வகுப்புப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.