Published : 11 Aug 2020 07:18 am

Updated : 11 Aug 2020 07:18 am

 

Published : 11 Aug 2020 07:18 AM
Last Updated : 11 Aug 2020 07:18 AM

தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தினால் உயர்ந்த நிலைக்கு செல்லலாம்; எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கிளவுட் கம்ப்யூட்டிங்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

uyarvukku-uyarkalvi

சென்னை

வரும் காலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறையாக கிளவுட் கம்ப்யூட்டிங் துறை உருவெடுக்கும் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆன்லைன் வழியாக மாணவ, மாணவிகள், பெற்றோர் இடையே உரையாற்றுகின்றனர். உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.


அந்த வகையில், கடந்த 8-ம் தேதி நடந்த ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் கிளவுட் கம்ப்யூட்டிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் குறித்து அத்துறை நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

பேபல் குளோபல் டேட்டா சயின்ஸ் நிறுவனத்தின் இன்ஜினீயரிங் பிரிவு மேலாளர் வித்யா சந்திரசேகரன்: ஒரு நிறுவனத்தின் தகவல்களை (டேட்டா) கட்டணம் செலுத்தி வேறொரு நிறுவனத்தின் சர்வரில் சேமித்து, தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்வது, மற்றவர்களின் சர்வர் உள்கட்டமைப்பு வசதிகளை வாடகைக்கு உபயோகித்துக் கொள்வது - இதை கிளவுட் கம்ப்யூட்டிங் என்று பொருள் கொள்ளலாம். இத்துறையில் இன்னும் 10 ஆண்டுகளில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகும். இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர், டேட்டா சயின்டிஸ்ட் போன்ற வேலைகளுக்கு வாய்ப்புகள் மிகுதியாக இருக்கும்.

கணிதத் திறனும், புள்ளியியல் திறனும் உடையவர்கள் இத்துறையில் ஜொலிக்கலாம். கிளவுட் ஆர்க்கிடெக்சர், டேட்டா இன்ஜினீயர், டேட்டா கன்சல்டன்ட், நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட் என பல்வேறு நிலைகளில் இத்துறையில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மேலும், நம் தகுதி, திறமையைப் பொருத்து, உயர் பொறுப்புகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் இத்துறையில் அதிகம்.

கோவை அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் கல்வி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் துறை தேர்வுநிலை உதவி பேராசிரியர் டாக்டர் ராம் கே.வாசுதேவன்: கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் மிகவும் கடினமான பாடம் என்று சிலர் கூறக் கேட்டிருப்பீர்கள். ஆனால், அது உண்மை அல்ல. எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேரார்வம் இருப்பவர்களுக்கு இது கடினமாக இருக்காது. அவர்கள் எளிதாக படிக்கலாம்.

இதில் புரோகிராமிங் லாங்வேஜ், ஆபரேட்டிங் சிஸ்டம், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமென்டட் ரியாலிட்டி, நெட்வொர்க்கிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), சைபர் செக்யூரிட்டி, மைக்ரோ பிராசஸர் அண்ட் கன்ட்ரோலர், எம்பெடட் சிஸ்டம்ஸ், இன்ஃபோடெய்ன்மென்ட், டேட்டா சயின்ஸ் அண்ட் அல்காரிதம்ஸ், பிளாக் செயின், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங், டீப் லேர்னிங், ஹெல்த் இன்ஃபோமெட்டிக்ஸ், ஆப்ஸ் அண்ட் மல்டிமீடியா, இ-காமர்ஸ், இ-லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறும்.

வரும் காலங்களில் இத்துறையில் புதுப்புது வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, நெட்வொர்க்கிங், சைபர் செக்யூரிட்டி போன்ற பிரிவுகளில் வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும். மேற்குறிப்பிட்ட பல்வேறு பிரிவுகளில் தற்போது திறமையான நிபுணர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர். இதில் முக்கியமான ஒரு விஷயம், பணியில் சேர்ந்ததோடு படிப்பை மறந்துவிடக் கூடாது. இத்துறையில் பணியில் சேர்வோர் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பது அவசியம். அப்போதுதான் வளர்ச்சி அடைய முடியும்.

சென்சியா டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஆனந்தி கிருஷ்ணன்: இந்தியாவில் சாப்ட்வேர் துறையை இளமையான துறை என்று அழைக்கின்றனர். தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல்மயமாகி வருவதால் இத்துறை அதிக வளர்ச்சி கண்டுவருகிறது. இதில், கிளவுட் கம்ப்\யூட்டிங் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப உலகில் தகவல் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில், தகவல்களை சேமிக்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகின்றன. இப்பணிக்கு அதிக அளவில் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, அடுத்த 10 அல்லது 12 ஆண்டுகளில் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் அதுசார்ந்த பணிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். அதோடு, பணி மேம்பாட்டுக்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

இத்துறையில் கிளவுட் கம்ப்யூட்டிங் சிஸ்டம் இன்ஜினீயர், கிளவுட் சொல்யூஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், கிளவுட் அப்ளிகேஷன் டெவலப்பர், கிளவுட் டேட்டா ஆர்க்கிடெக்சர், டேட்டா சயின்டிஸ்ட், கிளவுட் சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏ.ஐ.) சிஸ்டம் இன்ஜினீயர், ஏ.ஐ. ஆர்க்கிடெக்ட் என பல்வேறு பதவிகள் இருக்கின்றன.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் கிளவுட் கம்ப்யூட்டிங்கில் தங்களுக்கு பிடித்தமான பிரிவு எது என்பதை முதல் 2 ஆண்டுகளிலேயே முடிவு செய்துவிட வேண்டும். அதன்பிறகு, 3, 4-ம் ஆண்டுகள் படிக்கும்போது, பயன்பாட்டு அறிவை மேம்படுத்தும் வகையில், தேர்வு செய்த பிரிவில் சொந்தமாக புராஜெக்ட் செய்வது, தொழில் துறையில் அந்த பிரிவின் பயன்பாடுகளை தெரிந்துகொள்வது போன்ற செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவை தொடர்ந்து மேம்படுத்தி வருவது மிக மிக அவசியம். அப்போதுதான் இத்துறையில் நிலைத்து நிற்க முடிவதுடன், உயர்ந்த நிலையையும் அடைய முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், மாணவ, மாணவிகள், பெற்றோரின் பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். ஆன்லைன் வழியிலான இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/30DCjEm என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.


எண்ணற்ற வேலைவாய்ப்புகிளவுட் கம்ப்யூட்டிங்உயர்வுக்கு உயர்கல்விவழிகாட்டி நிகழ்ச்சிதுறை வல்லுநர்கள் தகவல்Uyarvukku uyarkalvi

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author