

எஸ்எஸ்எல்சியில் தேர்ச்சி பெற்ற, 40,222 கோவை மாவட்ட மாணவ, மாணவர்களின் மதிப்பெண்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
அரசுத் தேர்வுகள் துறை சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டது. அப்போது கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கவே, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாகக் கடந்த ஜூன் 9-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இன்று (ஆக.10) காலை 9.30 மணிக்கு அறிவிக்கப்பட்டன. மாணவர்களுக்கு அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்களுக்குக் குறுந்தகவல் மூலமாக மதிப்பெண்கள் அனுப்பப்பட்டன. இதேபோல் இணையதளம் மூலமாகவும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 19,978 மாணவர்களும், 20,444 மாணவிகளும் என 40,222 பேர் தேர்ச்சி பெற்றதாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அவர்களுக்கான மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன.
நிர்வாகம் வாரியாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம்:
அரசுப் பள்ளிகளில் படித்த 5,437 மாணவர்கள், 5,752 மாணவிகள் என 11,189 பேரும், நகராட்சிப் பள்ளிகளில் படித்த 194 மாணவர்கள், 129 மாணவிகள் என 323 பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 670 மாணவர்கள், 1,482 மாணவிகள் என 2,152 பேரும், நலத்துறைப் பள்ளிகளில் படித்த 91 மாணவர்கள், 77 மாணவிகள் என 168 பேரும், உதவி பெறும் பள்ளிகளில் படித்த 2,136 மாணவர்கள், 1,830 மாணவிகள் என 3,966 பேரும், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,363 மாணவர்கள், 1,956 மாணவிகள் என 3,319 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் படித்த 80 மாணவர்கள், 202 மாணவிகள் என 282 பேரும், மெட்ரிக் பள்ளிகளில் படித்த 9,546 மாணவர்கள், 8,759 மாணவிகள் என 18,305 பேரும், தனியார் பள்ளிகளில் படித்த 461 மாணவர்கள், 257 மாணவிகள் என 718 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
ஆக. 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வரின் சான்றொப்பமிட்ட 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அதைக் காண்பித்து மாணவர்கள் மேல்நிலை வகுப்புகள், டிப்ளமோ வகுப்புகளில் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்குக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.