Published : 10 Aug 2020 03:55 PM
Last Updated : 10 Aug 2020 03:55 PM

மீன்கொத்தியில் இருந்து புல்லட் ரயில்; கரையான் புற்றில் இருந்து மால்- இயற்கையின் படைப்புகளை மீளுருவாக்கம் செய்யும் பயோமிமிக்ரி படிப்பு ஐஐடி சென்னையில் அறிமுகம்

இயற்கையின் படைப்புகளை மீளுருவாக்கம் செய்து, அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்கும் வகையில் பயோமிமிக்ரி படிப்பு, இந்தியாவிலேயே முதல்முறையாக ஐஐடி சென்னையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

முழு செமஸ்டருக்கு வழங்கப்படும் இந்தப் படிப்பை ஐஐடி சென்னையில் படிக்கும் யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு, முதலாம் ஆண்டு, இறுதி ஆண்டு என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் படிக்கும் வகையில் இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான இயற்கையையும் நவீனப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இணைக்கும் புள்ளியாக பயோமிமிக்ரி படிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐடி பேராசிரியர் சிவ சுப்பிரமணியன் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''பயோமிமிக்ரி என்பதை இயற்கையைப் பற்றிப் படிக்கும் படிப்பல்ல. இயற்கை உருவாக்கிய தனித்துவமான படைப்புகளில் இருந்து கற்றுக்கொள்வதாகும்.

இதைப் படிக்க நீங்கள் பொறியாளராகவோ உயிரியியலாளராகவோ இருக்கத் தேவையில்லை. இயற்கை மீதான ஆர்வமே போதும். ஒரு தாமரை இதழைப் பார்த்து, 'எப்படி இது எப்போதும் தூய்மையாகவே இருக்கிறது?' என்று கேட்கத் தெரிந்தால் போது,.

அதிலுள்ள நுண் இழைகள் எப்படித் தண்ணீர்த் துளிகளை விலக்கி விடுகின்றன, அதனால்தான் தாமரையில் அழுக்குப் படியாமல் எப்போதும் தூய்மையாக இருக்கிறது என்பதை அறியமுடியும். அந்தத் தத்துவத்தில் இருந்து குழந்தைகளின் பள்ளிக்கூட ஆடைகளை அழுக்குப் படியாத கட்டமைப்பில் தயாரிக்க முடியும்.

இயற்கையின் இதேபோன்ற வழிமுறைகளை வைத்து உலகத்தில் இருக்கும் பொதுவான சவால்களுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. உதாரணத்துக்கு மீன்கொத்திப் பறவையின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் ஜப்பானில் புல்லட் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுண் துளைகளுடன் இரவில் காற்றை உள்ளே இழுத்து, பகலில் காற்றை வெளியேற்றி இயற்கையாகவே ஏசி போன்ற குளிர்ச்சியான அமைப்பைச் செய்து வசிக்கும் கரையான் புற்றின் கட்டமைப்பைக் கொண்டுதான் தென்னாப்பிரிக்காவில் ஒரு மால் கட்டப்பட்டுள்ளது.

திமிங்கலத்தின் இறக்கை அமைப்புகளை மாதிரியாகக் கொண்டு ராட்சதக் காற்றாடிகளின் இறக்கைகள் உருவாக்கப்பட்டன. காற்றில் இருந்து நீரைப் பெறும் பாலைவன வண்டுகள் மூலம் தானாகவே நிரம்பும் தண்ணீர் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இயற்கையின் படைப்புகளில் இருந்து இதுபோன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். அதற்கு வழிகாட்டும் வகையில் பயோமிமிக்ரி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஐஐடி சென்னை மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் படிப்பைப் படிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் பிற கல்லூரிகளில் இந்தப் படிப்பைத் தொடங்க வழிகாட்டவும் ஐஐடி சென்னை காத்திருக்கிறது'' என்றார் பேராசிரியர் சிவசுப்பிரமணியன்.

மேலும் விவரங்களுக்கு:
சிவ சுப்பிரமணியன்- 91766 12393
இ-மெயில் முகவரி: shiva@thinkpaperclip.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x