Last Updated : 10 Aug, 2020 09:48 AM

 

Published : 10 Aug 2020 09:48 AM
Last Updated : 10 Aug 2020 09:48 AM

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் போதும்: இந்திய வனப்பணிக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 58-வது இடம் பிடித்த கோவை பெண் பட்டதாரி

கோவையைச் சேர்ந்த பெண் பட்டதாரி எஸ்.பரணி, இந்திய வனப்பணிக்கான தேர்வில் அகில இந்திய அளவில் 58-வது இடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் குடிமைப் பணிக்கான தேர்வு முடிவுகளை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதில் இந்திய வனப்பணிக்கான பிரிவில் கோவையைச் சேர்ந்த பெண் பட்டதாரியான எஸ்.பரணி, அகில இந்திய அளவில் 58-வது இடத்தைப் பிடித்துத் தேர்ச்சி பெற்றார்.

இது குறித்து எஸ்.பரணி, 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது:

''கோவை கவுண்டம்பாளையம் எனக்கு சொந்த ஊர். என்னுடைய தந்தை சாத்தூர்சாமி, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. தாய் பத்மா குடும்பத் தலைவி. என்னுடைய சகோதரி பிரியதர்ஷினி அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். என்னுடைய கணவர் ஜி.ஜி. நரேந்திரன், ஐ.எஃப்.எஸ். அதிகாரி. தற்போது சித்தூரில் பணியாற்றி வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் படித்தார்.

பள்ளிப் படிப்பை முடித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கோவை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எஸ்சி. வேளாண்மை படித்து கடந்த 2014-ம் ஆண்டு பட்டம் பெற்றேன்.

கல்லூரியில் படிக்கும் போதே குடிமைப்பணிக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அதற்குத் தயாராகி விட்டேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும், கோவை அரசு கலைக் கல்லூரி அரசியல் அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் பி.கனகராஜ் நடத்தி வரும், இலவச சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கினேன். என்னுடைய சீனியரான ஐ.பி.எஸ். அதிகாரி ராகசுதா எனக்கு ரோல் மாடல். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இத்தேர்வுக்காக எனக்குப் பலவகையில் உதவி செய்தார்.

இதேபோல் என்னுடைய கணவரும், பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர். இதேபோல் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் என்னுடன் படித்தவர்கள் நிறைய உதவினர். இதற்கு முன் 4 முறை தேர்வெழுதியும் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. 5-வது முறைதான் தேர்ச்சி பெற முடிந்தது.

தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், சிறந்த வழிகாட்டுதலும் இருந்தால் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்''.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x