Published : 07 Aug 2020 01:02 PM
Last Updated : 07 Aug 2020 01:02 PM

‘பள்ளிக் குழந்தைகளே கரோனாவிலிருந்து விலகியிருங்கள்!’- வாட்ஸ் அப் மூலம் விழிப்புணர்வூட்டும் பொம்மலாட்டக் கலைஞர்

கோவை

அன்றாடம் ஆயிரக்கணக்கில் வந்துவிழும் வாட்ஸ் அப் காணொலிகளுக்கு மத்தியில் கவனம் ஈர்க்கிறது பொம்மலாட்டக் கலைஞர் சீனிவாசனின் கரோனா விழிப்புணர்வு பொம்மலாட்டக் காணொலி.

“பள்ளிக் குழந்தைகளே உஷாரா இருந்துக்குங்க. மாஸ்க்கு யூஸ் பண்ணி நோய் வராமத் தடுத்துக்குங்க. வீட்டுக்கு வந்ததுமே சோப்பு போட்டுக் குளிச்சுக்குங்க. தும்மலு, ஜூரம் இருந்தா அம்மாகிட்ட சொல்லிடுங்க. கரோனா வந்திடாம நாமளேதான் தடுத்துக்கணுங்க” என்று பாடலுடன் சீனிவாசனின் பொம்மலாட்ட அரங்கில் பொம்மைகள் ஆடுவது சிறப்பு.

கோவையைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் சீனிவாசன். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி எனப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர். அரசுத் துறைகள் அழைப்பின் பேரில் கொசு ஒழிப்பு, மதுவிலக்கு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, வாக்களிப்பின் கடமை போன்ற விஷயங்களை விழிப்புணர்வூட்ட, பொது இடங்களில் பாடல் வடிவில் பொம்மலாட்டம் நடத்தி வந்தவர்.

தற்போது கரோனா சூழலில் வீட்டிலேயே இருந்தாலும், பொம்மலாட்டக் கலை வடிவில் கரோனா விழிப்புணர்வை வாட்ஸ் அப், யூடியூப் மூலம் காட்சிப்படுத்தி வருகிறார். பள்ளி ஆசிரியர்களுக்கும் இவற்றை அனுப்பிவருகிறார்.

சீனிவாசனிடம் இது குறித்துப் பேசினோம்.

“இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவங்களுக்கும்கூட கரோனா விழிப்புணர்வு அவசியம். அதுக்காகவே என் நண்பர்கள் மூலம் ஏழெட்டு விழிப்புணர்வுப் பாடல்களை எழுதி, பதிவு செய்து, பொம்மைகள் செய்து ஆட விடறேன். பொது முடக்கத்துக்கு நடுவே மக்களுக்கு இதையெல்லாம் எப்படிப் போட்டுக் காட்டறது? நம்ம வசதிக்கு டிவியில எல்லாம் வர முடியாது. பள்ளிப் பாடங்களே ஆன்லைன் வகுப்புல நடத்தும்போது நாமும் அதே மாதிரி செஞ்சா என்னன்னு யோசனை.

நான் குடியிருக்கிற வீட்டுப் பக்கத்துல இருக்கிற குழந்தைகள் எப்பவும் எங்க வீட்டுக்கு வருவாங்க. ‘தாத்தா, தாத்தா கதை சொல்லு. பொம்மைய வச்சுப் பாட்டுப் பாடு’ன்னு கேப்பாங்க. அவங்களையே பார்க்க வச்சு தினம் நாலஞ்சு பாட்டை வீடியோவா பதிவு பண்ணினேன். நிறைய பள்ளிக்கூடங்களுக்குப் போய் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறதால எங்கிட்ட நிறையத் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளிக் குழந்தைகளோட செல்போன் எண்கள் இருக்கு. அவங்ககிட்ட எல்லாம் பேசினேன்.

‘கரோனா விழிப்புணர்வு பொம்மலாட்டப் பாடல்களை நம்ம பள்ளிக் குழந்தைகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பறேன். அவங்களுக்குக் காட்ட முடியுமா?’ன்னு கேட்டேன். இதுக்கு சுமார் 50 பள்ளி ஆசிரியர்கள் சம்மதிச்சாங்க. அவங்களுக்கு இந்தக் காட்சிகளை அனுப்பினா, அதைப் பார்த்துட்டு தங்களோட பள்ளிக் குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கிறாங்க” என்றவரிடம், “இதில் வருமானம் எதுவும் கிடைக்காதே?” எனக் கேட்டோம்.

“நான் வருமானத்தை எதிர்பார்த்து இதைச் செய்யலைங்க. எனக்கு வர்ற பென்ஷன் பணமே எனக்குப் போதும். இந்தக் கலை, குழந்தைகளுக்குப் போய்ச் சேரணும். அவங்க அறிவுபூர்வமாச் சிந்திக்கணும். அதுக்காகத்தான் நான் பள்ளிக்கூடத்துல தலைமையாசிரியரா இருந்த காலத்திலேயே இந்த பொம்மலாட்டக் கலையை ஒருத்தர்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். நிறைய ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் கொடுத்திருக்கேன்.

ஏதாவது வெளியூர் போனாத்தான் பொம்மைகளை எடுத்துட்டுப் போக, வர நிறைய செலவாகும். இப்ப இதுல எங்களுக்கு என்ன பெரிய செலவு வந்துடப்போகுது? குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் விழிப்புணர்வை உருவாக்கறதுதுதானே முக்கியம்” என்றார் சீனிவாசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x