Published : 07 Aug 2020 06:29 AM
Last Updated : 07 Aug 2020 06:29 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘என்டிஆர்எஃப்’ வழங்கும் ‘பறக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி தொடக்கம்: ஏவுகணை துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்; ‘பிரம்மோஸ்’ ஏவுகணை விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தகவல்

ஏவுகணை தொழில்நுட்பத் துறையில் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF) உடன் இணைந்து நடத்திய ‘பறக்கலாம் வாங்க’ (லெட்ஸ் ஃப்ளை) எனும் இணைய வழி வழிகாட்டி நிகழ்ச்சியில் பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆன்லைன் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்துடன் (என்டிஆர்எஃப்) இணைந்து ‘பறக்கலாம் வாங்க’ எனும் விமானவியல் துறை தொடர்பான நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகிறது. விமானவியல் தொடர்பான பல்வேறு பயனுள்ள தகவல்கள், அதில்உள்ள படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து மூத்த அறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.

5 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வுகடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் நிகழ்வில், ‘பிரம்மோஸின் தந்தை’ என்று அழைக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணுபிள்ளை, ‘இந்திய ஏவுகணைகள்: கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் பேசினார். அவர் கூறியதாவது:

ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா முற்காலத்திலேயே பல சாதனைகள் புரிந்துள்ளது. இதை பயன்படுத்தியே ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற இந்திய மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றனர். சீனாவின் வெடிபொருளை முதன்முதலாக ஏவுகணை குழல் வடிவில் பயன்படுத்தியது இந்திய மன்னர்களே.

இந்திய பாரம்பரியத்தின் நீட்சியே விக்ரம் சாராபாய் உருவாக்கிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம். இது ஏவுகணை, ஏவுகலன்கள் ஆராய்ச்சிக்கான பல ஆக்கப்பூர்வமான செயல்களைமுன்னெடுத்தது. ஏவுகணை தொழில்நுட்பத்தில் (ராக்கெட் டெக்னாலஜி) இந்தியா படிப்படியாக பல சாதனைகள் படைத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புகழ்பெற்ற இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளரான சதீஷ்தவான், அப்துல்கலாம் போன்றோர் ஏவுகணை ஊர்தி, ஏவுகணை ஆராய்ச்சியை சிறப்பாக தொடர்ந்தனர்.

அந்த வகையில், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ், திரிசூல் என்ற 5 முக்கிய ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியது. அதில் பல வெற்றிகளையும் பெற்றதால், உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, சீரியங்கு ஏவுகணையை (க்ரூஸ்) உருவாக்கியது. இது ரேடார்களின் பார்வையில் இருந்து தப்பி, எதிரி களின் இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது. இந்திய கூட்டுமுயற்சியில் உருவான பிரம்மோஸ்ஏவுகணை, ஒலியின் வேகத்தைவிட3 மடங்கு வேகத்தில் பறக்கக்கூடியது. இது மிக துல்லியமாக இலக்குகளைத் தாக்கி, அழிப்பதை வெற்றிகரமான சோதனைகள் மூலம் நிரூபித்துள்ளோம்.

ஏவுகணை வடிவமைப்பு, உருவாக்குதல், உற்பத்தி, சோதனை செய்தல் என பல துறைகளில் மாணவர்கள் பங்களிக்க வாய்ப்புள்ளது. இந்திய ஏவுகணை துறையில் பெண்களுக்கான வாய்ப்புகளும் உண்டு.அக்னி-5 ஏவுகணை திட்ட இயக்குநரான டெஸ்ஸி தாமஸ் என்ற பெண்,ராணுவ விமான விஞ்ஞானி என்பதுகுறிப்பிடத்தக்கது. விண்வெளி, விமானவியல், இயந்திரவியல், எலெக்ட்ரானிக்ஸ் - தகவல் தொடர்பியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் பயின்ற மாணவர்கள் ஏவுகணை துறையில் சேர ஏராளமான வாய்ப்புகள் உள் ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஏவுகணை ஏவுவது, சோதனை செய்வது, இலக்குகளைத் தாக்கி அழிப்பது போன்றவற்றை காணொலி மூலமாகவும் விளக்கினார். நிறைவாக, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

‘ஆளில்லா விமானங்கள்’ குறித்து இன்று உரை

‘பறக்கலாம் வாங்க (லெட்ஸ் ஃபிளை)’ வழிகாட்டி நிகழ்ச்சி 5 நாட்கள் நடக்கிறது. தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கி, 8 மணி வரை நடைபெறும். 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தொடங்கி, அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க ரூ.235 செலுத்தி, https://connect.hindutamil.in/fly.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இன்றைய (ஆகஸ்ட் 7) நிகழ்வில் ‘ஆளில்லா விமானங்கள்: கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் செந்தில்குமார் உரையாற்றுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x