Published : 05 Aug 2020 05:04 PM
Last Updated : 05 Aug 2020 05:04 PM

210 ஏக்கரில் ஐஐஎம் சிர்மார்: ஆன்லைனில் அடிக்கல் நாட்டிய கல்வி அமைச்சர்

புதுடெல்லி

இமாச்சலப் பிரதேசத்தில் 210 ஏக்கரில் அமையவுள்ள ஐஐஎம் சிர்மார் கல்வி நிறுவனத்துக்கு மத்தியக் கல்வி அமைச்சர் பொக்ரியால் இன்று ஆன்லைனில் அடிக்கல் நாட்டினார்.

2015-ம் ஆண்டில் இருந்து ஐஐஎம் லக்னோவால் ஐஐஎம் சிர்மார் கல்வி நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இமாச்சலப் பிரதேசம், சிர்மார் பகுதியில் உள்ள தற்காலிக வளாகத்தில் வெறும் 20 மாணவர்களும் முதல் பேட்ச் முதுகலைக் கல்வி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 1,170 மாணவர்கள் படிக்கக்கூடிய அளவில் முழு வசதிகளுடன் கூடிய நிலையான வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு ஒட்டுமொத்தமாக ரூ.531.75 கோடி நிதி ஒதுக்கியது. இதில் ரூ.392.51 கோடி கட்டுமானச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 210 ஏக்கரில் அமையவுள்ள ஐஐஎம் சிர்மார் கல்வி நிறுவனத்துக்கு மத்தியக் கல்வி அமைச்சர் பொக்ரியால் இன்று ஆன்லைனில் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், கல்வி இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொக்ரியால், ''எம்பிஏ மாணவர்கள் வருங்கால கார்ப்பரேட் தலைவர்களாகவும் தொழிலதிபர்களாகவும் மாறுபவர்கள். பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தை நனவாக்க உள்ளவர்கள். இவர்களிடம்தான் இந்தியாவைச் சரியான பாதையில் எடுத்துச் செல்வதற்கான பொறுப்பு உள்ளது.

தேசத்தைக் கட்டமைப்பதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பை நாம் ஊக்குவித்து அனைத்துத் துறைகளிலும் நிபுணத்துவத்தை உருவாக்க வேண்டும்.

ஐஐஎம் சிர்மாரை உலகத் தரம் வாய்ந்த ஒன்றாக மாற்றுவதில் மத்தியக் கல்வி அமைச்சகம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறேன்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x