Published : 04 Aug 2020 05:04 PM
Last Updated : 04 Aug 2020 05:04 PM

சென்னை ஐஐடியின் ஆன்லைன் பிஎஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: செப்.15 கடைசி நாள்

சென்னை ஐஐடி சார்பில் ஆன்லைன் பிஎஸ்சி பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள பிஎஸ்சி இணையவழிப் பட்டப்படிப்பு (Online B.Sc. Degree in Programming and Data Science) மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது.

1. அடிப்படைப் பட்டம் (Foundation programme),
2. டிப்ளமோ பட்டம் (Diploma programme),
2. இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme).

இந்தப் பட்டப்படிப்பின் மூன்று நிலைகளில் எந்தவொரு கட்டத்திலும் மாணவர்கள் வெளியேற முடியும், அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸிலிருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் கிடைக்கும். தகுதியின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுதித் தேர்வுக்கு ரூ.3000 கட்டணம் செலுத்த வேண்டும்.

என்ன தகுதி?

பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் கல்லூரிகளில் வேறு இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிகள் மற்றும் பணியில் இருப்போரும் இந்தப் பட்டப்படிப்பில் இணையத் தகுதியானவர்கள் ஆவர்.

பிற கல்லூரிகளில் வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், படிப்புகளை மாற்றத் தேவையில்லாமல் இந்தப் பட்டப்படிப்பைத் தொடர முடியும்.

படிப்பு எப்படி?

மாணவர்களுக்கு 4 பாடங்களில் (கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை) 4 வாரப் பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பிவைக்கப்படும். இந்த மாணவர்கள் இணையத்தில் பாட விரிவுரைகளைக் கற்பதுடன், இணையத்தின் வாயிலாகவே தங்கள் கல்விப் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும்

மேலும் 4 வாரங்களின் முடிவில் தகுதித் தேர்வை எழுத வேண்டும். ஒட்டுமொத்த மதிப்பெண் 50 சதவீதத் தேர்ச்சியுடன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் அடிப்படைப் பட்டத்திற்குப் (foundation programme) பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.

இதில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 15 ஆகும்.

பட்டப்படிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு: https://www.onlinedegree.iitm.ac.in/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x