Last Updated : 04 Aug, 2020 04:43 PM

 

Published : 04 Aug 2020 04:43 PM
Last Updated : 04 Aug 2020 04:43 PM

யூபிஎஸ்சி தேர்வில் முத்திரை பதித்த கடலூர் மாவட்ட மாணவிகள்: தமிழக அளவில் 2 மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்தனர்

ஐஸ்வர்யா - பிரியங்கா

கடலூர்

யூபிஎஸ்சி தேர்வில் கடலூர் மாவட்ட மாணவிகள் இருவர், தமிழக அளவில் 2 மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கே.ஆர்.ராமநாதன் என்பவரின் மகள் ஐஸ்வர்யா, யூபிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் 2-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 47-வது இடத்தையும் பிடித்து இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.

மருங்கூரை சொந்த ஊராகக் கொண்ட ராமநாதன், தற்போது கடலூரில் வசித்து வருகிறார். இவரது மகள் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, 2017-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டுமானத் துறையில் பொறியியல் பட்டம் முடித்தார். அதையடுத்து, 2018-ல் யூபிஎஸ்சி தேர்வெழுதி அகில ஐஆர்எஸ் பணிக்குத் தேர்வாகி, தற்போது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரயில்வேயில் பயிற்சியில் உள்ளார். பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டே 2019-ம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்டு அகில இந்திய அளவில் 47-வது இடத்தையும், மாநில அளவில் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

இது தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் பேசிய போது, "தற்போது நான் ஐஆர்ஏஎஸ் பயிற்சியில் உள்ளேன். என்னை இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தி என் வளர்ச்சிக்கு வித்திட்டது எனது அம்மா இளவரசிதான். அவர் சிறுவயதிலேயே திருமணம் செய்துகொண்டாலும், தொடர்ந்து படித்து, போட்டித் தேர்வுகளை எழுதி, தமிழக அரசின் கல்வித் துறையில் பணியாளராகப் பணிபுரிகிறார். என் அம்மாவை பார்த்துதான் போட்டித் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது எனக் கற்றுக் கொண்டேன்.

எனக்கு ஐஏஎஸ் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே எளிய மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைத்திடும் வகையில் எனது பணிகள் அமையும்" என்றார்.

இதேபோன்று, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 68-வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

சிவப்பிரகாசத்தின் மனைவி ஏ.பரிமளா ஆனத்தூர் அஞ்சல் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராகப் பணிபுரிந்துவரும் நிலையில், அவரது இளைய மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிரியங்கா, அண்ணா பொறியியல் கல்லூரியில் பயோ- மருத்துவப் பொறியியல் முடித்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை எதிர்கொள்ளும் விதமாக சென்னையில் உள்ள பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். முதல் தேர்வில் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனாலும், தொடர்ந்து 2-வது முறையாக தேர்வை எதிர்கொண்டு மாநில அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் பேசியபோது, "கண்டிப்பாக எனக்கு இந்திய ஆட்சிப் பணி கிடைக்கும். பணி கிடைத்ததும், விளிம்பு நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கை மேம்படவும், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திடவும், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களிடம் இருக்கும் திறனை அறிந்து, திறன் மேம்பாடு மூலம் அவர்களுக்கு உதவி செய்வேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x