Published : 04 Aug 2020 12:53 PM
Last Updated : 04 Aug 2020 12:53 PM

2019-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த தமிழக இளைஞர்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2019-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவு வெளியானது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ் குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

யுபிஎஸ்சி சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். இளங்கலை பட்டம் முடித்திருப்பது தேர்வை எதிர்கொள்ள அடிப்படைத் தகுதியாக உள்ளது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சிபெறுபவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 3 கட்டங்களிலும் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணிகள் ஒதுக்கப்படுகின்றன.

2019 ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் 2019 மாதம் நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு 2020 பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை நேர்காணல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2019 சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் 927 பணியிடங்களுக்கு தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. 829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11 தேர்வாளர்களின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 011- 23385271 / 23381125 / 23098543 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் பிரதீப் சிங், ஜட்டின் கிஷோர், பிரதீபா வர்மா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x