Last Updated : 03 Aug, 2020 05:55 PM

 

Published : 03 Aug 2020 05:55 PM
Last Updated : 03 Aug 2020 05:55 PM

''ஐ... பொஸ்தகம் கிடைச்சிருச்சு''- மகிழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள்

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பில் இன்று புத்தகங்களும், புத்தகப் பையும் வழங்கப்பட்டன.

தனியார் பள்ளிக் குழந்தைகள் இணைய வழியில் கல்வி கற்றுக் கொண்டிருக்கையில், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இதுவரையில் புத்தகங்கள் வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் இன்று தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே புத்தகங்களும், புத்தகப்பையும் வழங்கப்பட்டன.

மதுரை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள மாயாண்டிப்பட்டி அரசுப் பள்ளியில் பாடப் புத்தகங்களைப் பெற்ற பிள்ளைகள் மகிழ்ச்சியில் குதியாட்டம் போட்டனர். அவர்களில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கூறுகையில், "பக்கத்து வீட்டு அண்ணனுக தனியார் ஸ்கூல்ல படிக்கிறதால, முன்னாடியே கிளாஸ் இருக்குதுன்னு சொல்லி, ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணுனாங்க.

எங்களுக்கு டிவி வழியாக பாடம் நடத்துற நேரத்தை மட்டும்தான் சொல்லியிருந்தாங்க. புத்தகம் தரல. இப்ப புத்தகம் கிடைச்சிருச்சி. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஸ்கூல் பேக்கும் கொடுத்திட்டாங்க. அடுத்த வாரம் 2 செட் யூனிபார்மும், 4 மாஸ்க்கும் தரப்போறாங்களாம். டீச்சர் சொன்னாங்க" என்றார்.

இதுவரையில் அரசுப் பள்ளிகளில் புத்தகம், குறிப்பேடுகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட எண்ணற்ற விலையில்லாப் பொருட்கள் வழங்கப்பட்டாலும் கூட, இதுவரையில் நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கத் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக வருமானத்தை இழந்துள்ளதால், பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்த்தால் என்ன? என்ற எண்ணம் கீழ்நடுத்தர வர்க்கத்திடம் ஏற்பட்டிருக்கிறது.

இன்று சீருடை வழங்க வந்த ஆசிரியர்களிடம், பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பது பற்றிக் கேட்டனர். மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அரசு இன்னும் அனுமதி தரவில்லை என்றும், அனுமதி வந்ததும் நாங்களே சொல்லியனுப்புகிறோம் என்றும் ஆசிரியர்கள் பதில் கூறினர்.

'அரசுப் பள்ளிகளில் இனி சேரும் மாணவர்களுக்குப் புத்தகங்கள், சீருடைகள் கிடைக்க வாய்ப்புள்ளதா?' என்று மதுரை கிழக்கு ஒன்றியம் கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவனிடம் கேட்டபோது, "இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கண்டிப்பாக அதிகரிக்கும் என்று எங்களுக்குத் தெரியும். எனவே, எங்கள் பள்ளியைப் பொறுத்தவரையில் கூடுதலாக 10 சதவிகித மாணவர்களுக்குப் புத்தகங்கள், சீருடைகளை வாங்கி வைத்துவிட்டோம்.

நிறைய பள்ளிகள் அப்படிச் செய்திருக்க வாய்ப்புண்டு. எனவே, தயங்காமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x