Published : 02 Aug 2020 07:18 am

Updated : 02 Aug 2020 07:18 am

 

Published : 02 Aug 2020 07:18 AM
Last Updated : 02 Aug 2020 07:18 AM

பிடித்த படிப்பை தேர்வுசெய்து ஆர்வத்துடன் படித்தால் கற்கும் கல்வி நம்மை வாழவைக்கும்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் கலை, அறிவியல் படிப்புகள் குறித்து நிபுணர்கள் உரை

uyarvukku-uyarkalvi

சென்னை

பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு மட்டுமல்லாமல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் கூறினர்.

பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் நாளிதழ்’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில், ஒவ்வொரு நாளும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அந்தந்த துறை வல்லுநர்கள் உரை நிகழ்த்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 31-ம் தேதி நடந்த நிகழ்வில் கலை அறிவியல் படிப்புகள் குறித்து வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

* சென்னை ஆவடி நாசரேத் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் மேரி ஏஞ்சலின் சந்தோசம்: தமிழகத்தில் 784 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. பிளஸ் 2 முடிப்பவர்களில் 20 சதவீதம் பேர் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதாக உயர்கல்வி ஆய்வறிக்கை கூறுகிறது. பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ, எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்பிஏ என பல்வேறு நிலைகளில் கலை, அறிவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பி.ஏ. படிப்பில் வரலாறு, சுற்றுலா மேலாண்மை, பொருளாதாரம், சமூகவியல், தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், கிரிமினாலஜி - போலீஸ் நிர்வாகம் உள்ளிட்ட பாடங்களும், பி.எஸ்சி. படிப்பில் கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், உளவியல், ஊட்டச்சத்து, உணவு சேவை மேலாண்மை, விஷுவல் கம்யூனிகேஷன், புள்ளியியல், உயிரி வேதியியல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளும் உள்ளன.

பி.காம். படிப்பில் வங்கி மேலாண்மை, கார்ப்பரேட் செகரட்டரிஷிப், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கணக்கு மற்றும் நிதி முதலான பாடங்களும், பிபிஏ படிப்பில் மனிதவளம், நிதி, வங்கி - காப்பீடு, வெளிநாட்டு வர்த்தகம், விருந்தோம்பல், ஓட்டல் மேலாண்மை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பாடங்களும், பிசிஏ, பிஎஸ்டபிள்யு (இளங்கலை சமூகப் பணி) போன்ற சிறப்பு படிப்புகளும் இருக்கின்றன. இவற்றில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான படிப்பை தேர்வுசெய்து படிக்கலாம். குறிப்பிட்ட வேலை என்று இல்லாமல், பலதரப்பட்ட வேலைகளுக்கும் செல்லலாம் என்பது கலை அறிவியல் படிப்புகளின் சிறப்பு அம்சம். டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற தேர்வாணையத் தேர்வுகளை எழுதி மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேரலாம். சமீபகாலமாக தனியார் நிறுவனங்களில் கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். சரியான படிப்பை, சரியான கல்லூரியில் தேர்வுசெய்வது மிகவும் முக்கியம்.

* சென்னை தேனாம்பேட்டை நீதிபதி பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி (எஸ்ஐஇடி) தமிழ்த் துறை பேராசிரியை டாக்டர் பர்வீன் சுல்தானா: எந்த படிப்பில் சேரலாம் என்று மாணவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரம் இது. இந்த படிப்பு நல்லதா? இதை படித்தால் உடனே வேலை கிடைக்குமா? என்று அவர்கள் குழப்பத்தில் இருக்கக்கூடும். தற்போது கல்வி என்பது பொருளாதாரம் தொடர்புடையதாக மாறிவிட்டது. படிப்பு என்பது வேலைக்குதான் என்றாகிவிட்டது. நமது நிலை, எதிர்கால இலக்கு, அதை அடைவதற்கான செயல்பாடு ஆகிய 3 விஷயங்களை மாணவர்கள் மனதில்கொள்ள வேண்டும். எந்த துறையை தேர்வு செய்தாலும் அதை ஆழ்ந்து, ஆர்வத்தோடு, முழு ஈடுபாட்டுடன் படித்தால் அந்த துறை கட்டாயம் உங்களை வாழவைக்கும். எனவே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்வுசெய்து சிறப்பாக படிக்க வேண்டும். படிப்பில் உயர்ந்தது, தாழ்ந்தது என எந்த வேறுபாடும் கிடையாது. எதுவானாலும் மிகுந்த ஆர்வத்தோடு படியுங்கள், ஆளுமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார்: மாணவர்கள் தங்கள் ஆளுமைக்கேற்ற படிப்பை தேர்வுசெய்வது முக்கியம். கலை, அறிவியல் படிப்புகள் மட்டுமின்றி டிசைனிங், ஃபேஷன் டெக்னாலஜி, ஓவியம், இசை என சிறப்பு படிப்புகளும் ஏராளமாக உள்ளன. ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு எழுதி, திருச்சியில் உள்ள ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் லா’ கல்லூரியில் சட்டம் படிக்கலாம். தேசிய ஓட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு எழுதி, அரசு ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் சேரலாம். எந்த கல்லூரி, எந்த படிப்பானாலும் உங்கள் ஆளுமைத் திறனை மேம்படுத்த கல்வியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கல்லூரியில் படிக்கும்போது இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பள்ளிப் பருவத்தில், நான் கற்றல் குறைபாடு உடைய (டிஸ்லெக்சியா) மாணவன். பள்ளிப் படிப்புகளை இடையில் நிறுத்தி, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை தனித் தேர்வராகவே எழுதினேன். பின்னர் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தேன். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இந்திய வருவாய் துறை (ஐஆர்எஸ்) பணிக்கு தேர்வானேன். பல இடையூறுகளுக்கு இடையே நானே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றபோது, உங்களால் ஏன் முடியாது? சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத, பட்டப் படிப்பில் முதல் வகுப்புகூட தேவை இல்லை. ஏதேனும் ஓர் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்.

பிளஸ் 2 முடித்தவர்கள் ராணுவத்தில் சேர விரும்பினால் யுபிஎஸ்சி நடத்தும் நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி (என்டிஏ), இந்தியன் நேவல் அகாடமி (ஐஎன்ஏ) தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால், அங்கு பட்டப் படிப்பை முடித்து ராணுவம், கடற்படையில் அதிகாரியாக பணிக்கு சேரலாம். அந்த கல்லூரியில் பயில்பவர்கள்தான் பின்னர் தலைமைப் பதவிக்கு வருகின்றனர். ஐஐடியில் பி.டெக். படிப்பு மட்டுமின்றி ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. படிப்புகளும் உள்ளன. அதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு எழுதி அப்படிப்புகளில் சேரலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், மாணவர்கள், பெற்றோர் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், சென்னை ஆவடி நாசரேத் கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/3jYYYT2 என்ற லிங்க்கில் முழு நிகழ்வையும் காணலாம்.

ஏரோநாட்டிகல் நிபுணர்கள் இன்று உரை

இந்து தமிழ் நாளிதழ்’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சி தினமும் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இன்று (ஆகஸ்ட் 2) மாலை நடக்கும் நிகழ்வில் ராணுவ விஞ்ஞானியும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மைய (என்டிஆர்எஃப்) இயக்குநருமான டாக்டர் வி.டில்லிபாபு, இண்டிகோ ஏர்லைன்ஸ் ஃபர்ஸ்ட் ஆபீசர் கேப்டன் பி.ராம் ரன்வீர், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸின் ஸ்கூல் ஆஃப் ஏரோநாட்டிகல் சயின்ஸ் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர்.அசோகன் ஆகியோர் பங்கேற்று ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் படிப்புகள் தொடர்பான பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து வழங்குகிறது. இதில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளவும்.

உயர்வுக்கு உயர்கல்விநிபுணர்கள் உரைகல்வி நம்மை வாழவைக்கும்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author