Published : 01 Aug 2020 11:41 AM
Last Updated : 01 Aug 2020 11:41 AM

பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 மறுதேர்வு எழுதியோர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: தேதிகள் அறிவிப்பு

சென்னை

பிளஸ் 1 பொதுத்தேர்வு, பிளஸ் 2 மறுதேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பட்டியலைப் பெறுதல் மற்றும் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 31) வெளியிடப்பட்டன. இதில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

அதேபோல ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் கணிசமான மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்துத் தேர்வெழுதாத மாணவர்களுக்கு கடந்த 27-ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகளும் நேற்று வெளியாகின. இதில் மறுதேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மதிப்பெண் பட்டியலைப் பெறுதல் மற்றும் விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் பெறுதல்:

05.08.2020 (புதன் கிழமை) முதல் 12.08.2020 (புதன் கிழமை) வரையிலான நாட்களில் மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கும்/ தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திற்கும் நேரில் சென்று தங்களது மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளி மாணாக்கர்களுக்குச் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரும், தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுதிய தேர்வு மையத்தின் பள்ளித் தலைமையாசிரியரும் மதிப்பெண் பட்டியலில், சான்றொப்பமிட்டிருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும்).

விடைத்தாள் நகல் / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்:

மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வு தொடர்பான விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் பின்வரும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்களில் விண்ணப்பிக்கலாம்.

மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்கள்: 05.08.2020 முதல் 12.08.2020 வரை
மேல்நிலை இரண்டாமாண்டு மறுதேர்வெழுதிய தேர்வர்கள்: 05.08.2020 முதல் 07.08.2020 வரை

தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்துத் தெளிவாக முடிவு செய்துகொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும்.

தற்போது ஒரே சமயத்தில் ஒரு பாடத்திற்கு விடைத்தாளின் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்: ஒவ்வொரு பாடத்திற்கும் - ரூ.275/-
மறுகூட்டல் கட்டணம்: உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-

பணம் செலுத்தும் முறை :
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல் :
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிக்கும் நாள்களில், தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x