Published : 31 Jul 2020 12:29 PM
Last Updated : 31 Jul 2020 12:29 PM

எந்த மொழியும் புதிய கல்விக் கொள்கையில் திணிக்கப்படவில்லை: கஸ்தூரிரங்கன் கருத்து

எந்த ஒரு மொழியும் புதிய கல்விக் கொள்கையில் திணிக்கப்படவில்லை என்று இஸ்ரோ முன்னாள் தலைவரும் புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து கடந்த புதன்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டது. இதில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் சமஸ்கிருத மொழிக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கஸ்தூரிரங்கன், ''பரந்துபட்ட பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகள் காரணமாக எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் ஆரம்பக்கட்டக் கல்வியில் 5-ம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைக் கொண்டு கற்பிப்பது முக்கியமாகும். ஏனெனில் கருத்துகளைப் புரிந்துகொள்வது மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதில் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி மூலம்தான் குழந்தையின் திறன் சிறப்பாக வெளிப்படும்.

இதைக் கருத்தில்கொண்டே தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி அல்லது பிராந்திய மொழி ஆகிய ஏதேனும் ஒன்றில் கல்வி கற்றல் என்பதைப் பரிந்துரை செய்தோம். ஒரு குழந்தை பிறந்த பிறகு அதன் தாய்மொழியில் சிறப்பாகக் கற்கத் தொடங்குகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது நம் நாட்டில் மட்டுமல்ல பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் குழந்தைகள் தங்கள் இளம் வயதில் ஏராளமான மொழிகளைக் கற்கும் திறன் கொண்டவர்கள். இந்நேரத்தில் மும்மொழிக் கொள்கையில் நெகிழ்வான அணுகுமுறையைக் கல்விக் கொள்கை பேசுகிறது.

எனினும் இதுகுறித்து மாநிலங்கள் சொந்தமாக முடிவெடுத்து அதை அமல்படுத்திக் கொள்ளலாம். கல்விக் கொள்கையில் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படவில்லை'' என்று கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x