Published : 30 Jul 2020 08:00 PM
Last Updated : 30 Jul 2020 08:00 PM

ஆன்லைன் வகுப்புகளுக்கான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும் சூழலில், தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே மழலையர் வகுப்புகளுக்கும் ஆரம்ப வகுப்புகளுக்கும் கூட ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதற்கான விதிமுறைகளை வகுத்து, அவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் இதேபோன்ற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்த்தனர்.

இது தொடர்பான வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசினுடைய பரிந்துரைகளின்படி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழிகாட்டு நெறிமுறைகளைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கேட்டதை அடுத்து ஆகஸ்டு 3-ம் தேதி அன்று தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று (ஜூலை 30) ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள்:

* முழுமையாக இணைய வழி, பகுதியளவு இணைய வழி மற்றும் இணையம் அல்லாத ஆஃப்லைன் மூலம் பாடங்களைக் கற்பிக்கலாம்.

* முழுமையான இணைய வழியில், தொடர் இணைய வசதியோடு கூடிய கணிப்பொறி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் தொலைக்காட்சி மூலம் பாடங்களைக் கற்பிக்கலாம்.

* பகுதியளவு இணைய வழியில் கணினி, ஸ்மார்ட் போன் மூலமாகக் கற்பிக்கப்படும். ஆனால் இதில் தொடர்ச்சியான இணைய வசதி இருக்காது.

* ஆஃப்லைன் வழியில் தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய வசதி இல்லாத அல்லது ஆய்வகம் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இணைய வசதி பெற முடிகிற கணினி, ஸ்மார்ட் போன் மூலமாகக் கற்பிக்கப்படும்.

* அதேபோல ஆன்லைன் கல்விக்கு மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள செயலிகள், இணைப்பு மூலமாகவும் கற்கலாம். (ஸ்வயம், இ-பாடசாலை, தீக்‌ஷா, கல்வித் தொலைக்காட்சி, மின் கற்றல், டிஎன்எஸ்சிஇஆர்டி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வீட்டுப் பள்ளி முறையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடம் நடத்தப்படும். இதே முறையில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் அதிக அளவிலான பாடங்கள் ஒளிபரப்பப்படும்.

* ஒரு மாணவருக்கு ஒரு வேளையில் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரை பாடம் எடுப்பதுடன் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுதல் அவசியம்.

* தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் (என்சிஇஆர்டி) ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள், 1800-க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் யூடியூப் பக்க வீடியோக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளிக்க வேண்டும்.

* கல்வித் தொலைக்காட்சியில் பள்ளி மாணவர்களுக்காக 2300-க்கும் மேற்பட்ட வீடியோக்களும், நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்காக 300-க்கும் மேற்பட்ட வீடியோக்களும் ஒளிபரப்பப்படும்.

* மாணவர்கள் ஊட்டச்சத்தான உணவுகளை உண்பதையும் ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

* ஆசிரியர்கள் தெளிவான மனநிலை மற்றும் உடல் நிலையுடன் பாடங்களை எடுப்பது அவசியம்.

* மாணவர்களுக்கு அவ்வப்போது ஆலோசனை நடத்துவது, மாணவர்களின் நிலையைப் பெற்றோரிடம் தெரிவிப்பது, சிறு தேர்வு வைப்பது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

* ஆன்லைன் கல்வி கற்கும்போது மாணவர்கள் பாலியல் ரீதியில் தவறான பாதைக்குச் செல்லாமல் இருப்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.

* ஆன்லைன் கற்றலில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஆசிரியர் அல்லது ஆலோசகரை நியமிக்க வேண்டும்.

* ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்குத் தேவையான வசதிகளை ஆசிரியர்களுக்குப் பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

* மாணவர்கள் அதிக நேரம் எலக்ட்ரானிக் உபகரணங்கள் முன்பு அமர்ந்து வகுப்புகளைக் கவனித்தால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றார் போல பாதிப்பு ஏற்படாமல் வகுப்புகளை நடத்த வேண்டும்.

* ஆன்லைன் வகுப்புகளை எடுத்தல், அதற்கான பாடம் தயாரித்தல், தேர்வுகளை நடத்துவது, கண்காணித்தல் ஆகிய பணிகளை தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

* ஆன்லைன் வகுப்புகள் மற்றும் அதற்குப் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்களில் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதவை என்ன என்பன குறித்து மாணவர்களுக்குத் தெளிவான விளக்கங்கள் கொடுக்க வேண்டும். அதனை அவர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

* ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடன் காணொலி முறையில் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியவை குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.

* ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக பெற்றோர் கண்காணித்து அறிவுரைகளை வழங்க வேண்டும்.

* எலக்ட்ரானிக் பொருட்களான, செல்போன் லேப்டாப் போன்றவற்றை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அவர்களின் வகுப்புகளில் செயல்பாடுகள், பாடத் திட்டங்கள் குறித்து குழந்தைகளிடம் அவ்வப்போது ஆலோசனை நடத்த வேண்டும்.

* ஆன்லைன் வகுப்புகள் மட்டுமில்லாது தனித்திறன் மற்றும் விளையாட்டு ஆகியவற்றிலும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

* மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் கற்றலுக்குத் தேவையான உபகரணங்களைப் பள்ளிகளே உறுதி செய்ய வேண்டும்.

* ஆரம்பக் கல்வியைப் படிக்கும் மாணவர்களுக்கு சுவாரசியமான முறையில் வகுப்புகள் அமைவது அவசியம். படங்களைப் பார்த்து கதை சொல்வது, கதையின் முடிவை மாற்றுவது / சேர்ப்பது, விடுகதைகள், வாசிப்பு, கைவினைப் பொருட்கள் செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

* ஆன்லைன் வகுப்புகளுக்கிடையே மாணவர்கள் உரையாடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். அதேபோல இணையத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரம் குறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:

* எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கக் கூடாது.

* 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அதிகபட்சமாக 1.30 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை எடுக்க வேண்டும்.

* 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே பாடங்களை நடத்த வேண்டும்.

* ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டும் இருக்க வேண்டும்.

* ஒவ்வொரு வகுப்புக்கும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இடைவெளி விட வேண்டியது அவசியம்.

* ஒவ்வோர் ஆசிரியரும் நாள் ஒன்றுக்கு 6 வகுப்புகள் மட்டுமே கற்பிக்க வேண்டும்.

* வகுப்புகள் எடுப்பதை இரு நாட்களுக்கு முன்பாகவோ அல்லது முந்தைய வகுப்பிலோ அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பிற்கு இடையிலும் ஐந்து நிமிடங்கள் மாணவர்கள் தங்களுடைய மனதை உற்சாகப்படுத்திக் கொள்ள நேரம் வழங்க வேண்டும்.
* ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்குமாறு பள்ளிகள், மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x