Last Updated : 29 Jul, 2020 02:25 PM

 

Published : 29 Jul 2020 02:25 PM
Last Updated : 29 Jul 2020 02:25 PM

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: மாலை 4 மணிக்கு முழு விவரம் வெளியாகிறது

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இன்று (ஜூன் 29) மாலை 4 மணிக்கு முழு விவரமும் வெளியாக உள்ளது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவு தனது முழுமையான அறிக்கையை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழு, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி சமர்ப்பித்தது.

இதில் மும்மொழிக் கொள்கை, பள்ளிக் கல்வி அமைப்பு முறை, 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு, ஒரே நாடு ஒரே பாடத்திட்டம், 9-ம் வகுப்பிலேயே மேல்நிலைக் கல்வி உள்ளிட்ட முன்மொழிவுகள் சர்ச்சையைக் கிளப்பின. இதற்கிடையே மத்திய அரசு, ஜூன் 30-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்துக் கூறலாம் என அறிவித்திருந்தது.

இதற்கிடையே கரோனா தொற்றால் புதிய கல்வியாண்டு செப்டம்பர் - அக்டோபரில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த மே 1-ம் தேதி, பிரதமர் மோடி வரைவு அறிக்கையைப் பார்வையிட்டார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து இன்று (ஜூன் 29) மாலை 4 மணிக்கு முழு விவரமும் வெளியாக உள்ளது. இதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்பதை மத்திய கல்வித்துறை அமைச்சகம் எனப் பெயர் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். இத்தகவலை மத்திய அரசின் முதன்மை செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.தத்வாலியா உறுதிப்படுத்தி உள்ளார்.

முன்னதாக, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களைவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''இதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள், அறிஞர்கள், கல்வியாளர்களின் பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது'' என்று தெரிவித்திருதார்.

தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1986-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது. தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x