Published : 27 Jul 2020 07:36 am

Updated : 27 Jul 2020 07:36 am

 

Published : 27 Jul 2020 07:36 AM
Last Updated : 27 Jul 2020 07:36 AM

செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ் துறைகளுக்கு வளமான எதிர்காலம்.. கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்- ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

uyarvukku-uyarkalvi

சென்னை

செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ் போன்ற படிப்புகளை படிப்பவர்களுக்கு வரும் காலத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் - 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தி வருகின்றன. கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 15 நாட்கள் நடக்கிறது. இதன் 2-வது நாள் நிகழ்ச்சியில் ‘செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்’ என்ற தலைப்பில் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:


கல்வி ஆலோசகரும், ‘தி என்ட்ரன்ஸ் கேட்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆர்.அஸ்வின்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்) என்பது கணினி அறிவியல் துறை மட்டுமின்றி பொறியியலின் அனைத்து துறைகளுடனும் தொடர்புடைய படிப்பு ஆகும். எதிர்காலத்தில் கோலோச்சக்கூடிய தொழில்நுட்பத் துறையாக இது திகழும். மெஷின் லேர்னிங், டீப் லேர்னிங் ஆகியவை இதன் உட்பிரிவு தொழில்நுட்பங்கள். செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் பொறியியலின் அனைத்து துறைகளையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இப்படிப்பைமுதன்மை பாடமாகவும் படிக்கலாம். ஏதேனும் ஒரு பொறியியல் பாடப் பிரிவில் ஒரு சிறப்புப் படிப்பாகவும் அல்லது கூடுதல் சான்றிதழ் படிப்பாகவும் படிக்கலாம். செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் படிப்புகள் பி.டெக். படிப்பாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள் முதலில் எந்த கல்லூரி என்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். எந்த பாடப்பிரிவு என்பது அதற்குப் பிறகுதான். கல்லூரியைத் தேர்வு செய்யும்போது அக்கல்லூரியின் தேர்ச்சி வீதம், முக்கிய நிறுவனங்களின் வளாக நேர்காணல் வாய்ப்பு, படிப்புக்கு உதவக்கூடிய தொழில்நுட்பப் போட்டிகள் நடத்தப்படும் சூழல், உயர்தர சிறப்பு ஆய்வக வசதி, ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழி கற்கக்கூடிய வாய்ப்பு, தகவல்தொடர்புத் திறனை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பு, அனுபவம் வாய்ந்த தரமான பேராசிரியர்கள் போன்ற அம்சங்களை மனதில் கொள்வது மிகுந்த பயனைத் தரும்.

எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், டெக்னாலஜி சொல்யூஷன் மற்றும் இன்னோவேஷன் சென்டர் தலைவர் கோ.ப.பொன்மணிவண்ணன்: செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ் துறைகள் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளாக விளங்குகின்றன. பி.இ., பி.டெக். படிப்பில் ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவைப் படித்துவிட்டு, எம்.இ., எம்.டெக்.கில் சிறப்புப் படிப்பாக படிக்கலாம்.

இன்று தனி மனித தேவைகளுக்கு மிகுந்த பயனளிக்கும் துறையாக ரோபோட்டிக்ஸ் துறை வளர்ந்துள்ளது. மருத்துவம், சமையல், வீட்டுப் பராமரிப்பு, தூய்மைப் பணி, பாதுகாப்பு, கட்டுமானம் என அனைத்து துறைகளிலும் ரோபோட்டிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. வேகமாக வளர்ச்சி கண்டுவரும் இதன் ஒரு பிரிவு தொழில்நுட்பம்தான் பயோமெட்டிக்ஸ். இதற்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. ‘இண்டஸ்ட்ரி 4.0’, ஆட்டோமேஷன், 3-டி பிரின்டிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் தொழில்துறையில் மாபெரும் அளவில் மாற்றங்களை நிகழ்த்த உள்ளன. இதன் காரணமாக தற்போது இருக்கும் வேலைவாய்ப்புகள் குறைந்தாலும், ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதுதான் உண்மை. அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

அமிர்தா விஷ்வ வித்யாபீடம் சென்னை வளாகத்தின் அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் கணினி அறிவியல் பொறியியல் துறை உதவி பேராசிரியை ஏ.பத்மாவதி: மாணவர்கள், பெற்றோர் மத்தியில் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ் தொடர்பான படிப்புகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இந்தியாவில் வரும் 2022-ம் ஆண்டில் ரோபோட்டிக்ஸ் துறையில் புதிதாக 5.80 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று உலகப் பொருளாதார அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. செயற்கை நுண்ணறிவு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் புரோகிராமிங் திறன், கணிதத் திறன், புள்ளியியல், சி பிளஸ் பிளஸ், பைத்தான், ஜாவா, ‘ஆர்’ கணினி லாங்வேஜ் போன்றவற்றில் திறமை பெற்றிருக்க வேணடும். வேலைவாய்ப்பை பொருத்தவரை, டேட்டா அனலிஸ்ட், பிக் டேட்டா இன்ஜினீயர், மெஷின் லேர்னிங் இன்ஜினீயர், புராடக்ட் இன்ஜினீயர், ரிசர்ச் சயின்டிஸ்ட் என்பது போன்ற பணிகளில் சேரலாம். ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் பெற முடியும்.

‘குவி டாட் இன்’ நிறுவனரும், தலைமை செயல்அதிகாரியுமான எஸ்.பி.பாலமுருகன்: எதிர்காலத்தில் கரோனா பரவல் போன்ற இக்கட்டான சூழலில் தகவல் தொழில்நுட்பத் துறை என்ன ஆகுமோ என்று யாரும் அச்சப்பட வேண்டாம். இத்துறையில் எப்போதும் வேலைவாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், தற்போது இருப்பதைவிட அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். ஃபுல்ஸ்டாக் டெவலப்பர், யுஐ மற்றும் யுஎக்ஸ் டிசைனர், ரோபோட்டிக்ஸ் புராசஸ் ஆட்டோமேஷன் டெவலப்பர், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சைபர் செக்யூரிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமென்டட் ரியாலிட்டி என பலவகையான வாய்ப்புகள் இதில் உள்ளன. மொத்தத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை பணியில் சேர விரும்பும் மாணவர்கள் தொடக்கத்தில் இருந்தே கணினித் திறனை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், பொறியியல் படிப்பு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை கற்பக விநாயகா கல்விக் குழும நிறுவனங்கள் இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/3g24Atl என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சி தினமும் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. தினந்தோறும் தொழில்துறை வல்லுநர்கள், மூத்த கல்வியாளர்கள், ஆளுமைமிக்க வழிகாட்டிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தேவையான பல்வேறு படிப்புகள் குறித்த பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகின்றனர். இதில், பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php எனும் லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.


செயற்கை நுண்ணறிவுடேட்டா சயின்ஸ்ரோபோட்டிக்ஸ்வளமான எதிர்காலம்வேலைவாய்ப்புகள்உயர்வுக்கு உயர்கல்விUyarvukku uyarkalvi

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author