Published : 26 Jul 2020 07:45 AM
Last Updated : 26 Jul 2020 07:45 AM

‘இந்து தமிழ் திசை’, அமிர்தா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி; எந்த படிப்பானாலும் நன்கு படித்தால் உயரலாம்: மாணவர்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா அறிவுரை

எந்த படிப்பு படித்தாலும் நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்வின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா கூறினார்.

இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழியிலான வழிகாட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா தொடங்கிவைத்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, உயர்கல்வி செல்வோர் எண்ணிக்கை 50%. நாட்டிலேயே இதுதான் அதிகம். ஆனால், இளங்கலை படிப்புக்கு செல்லும் 82% மாணவர்களில் 18% பேர் மட்டுமே முதுகலை படிப்புக்கு செல்கின்றனர். அவர்களிலும் 1% பேர்தான் ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி) போகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது.

இந்தியாவில் உருவாக்கப்படும் பொறியியல் பட்டதாரிகளில் 25% பேர் தமிழகத்தில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் 570 பொறியியல் கல்லூரிகள் இருப்பதால் இங்கு பொறியியல் படிப்புக்கான வாய்ப்புகளும் அதிகம். தேசிய தரவரிசையில் ‘டாப் 100’ நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பல கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

பொறியியல் படிப்பை பொருத்தவரை, எந்தப் பாடப் பிரிவில் சேர்வது என்பதுதான் மாணவர்கள் முன்நிற்கும் பெரிய சவால். வேலைவாய்ப்பு சந்தைதான் மாணவர்களின் பாடப்பிரிவை தீர்மானிக்கிறது.

இன்றைய சூழலில் வேலைவாய்ப்புக்கு ஏற்ற பல்வேறு புதிய படிப்புகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. கல்வித் தரத்துக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

குறிப்பிட்ட சில படிப்புகளை படித்தால்தான் உயரமுடியும் என்பது இல்லை. மாணவர்கள் எந்த படிப்பை படித்தாலும் நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். தேர்வு செய்யும் பாடத்தை நன்கு புரிந்து சிறப்பாக படித்தால் வாழ்க்கையில் உயரலாம்.

இவ்வாறு அபூர்வா கூறினார்.

தொடர்ந்து, ‘மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல்’ என்ற தலைப்பில் அத்துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

கோவை கேபிஆர் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் என்.குணசேகரன்: பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தொழில்நுட்ப திறன்களை ஆர்வத்தோடு வளர்த்துக்கொள்ள வேண்டும். மெக்கானிக்கல் படிப்பில் ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் என பல பிரிவுகள் உள்ளன. புராஜக்ட்களை உருவாக்குவது, தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வுகாணும் திறன், படைப்பாற்றல், குழுவாக பணியாற்றும் பண்பு, வெளிப்படுத்தும் திறன் போன்ற திறமைகள் இருந்தால் இத்துறையில் ஜொலிக்கலாம். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டால் வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

போர்டு நிறுவன முன்னாள் தரக் கட்டுப்பாடு பிரிவு இயக்குநரும், நிமாக் அலுமினியம் காஸ்டிக் இந்தியா நிறுவனத்தின் தர மேலாளருமான ஆர்.ஜீவானந்தம்: இந்தியாவில் தற்போது 1,000 பேரில் 22 பேர் வாகனம் வைத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் 3 ஆண்டுகளில் 1,000-க்கு 72 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 3.30 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கிவரும் இத்துறை அடுத்த 6 ஆண்டுகளில் 6.50 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிட்டுள்ளனர். வரும்காலத்தில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எதிர்காலத்தில் மின்வாகனங்கள், வீட்டில் இருந்தபடியே இயக்கும் கனெக்டட் கார்கள், தானாகவே செயல்படும் ஆட்டோ கார் என பல புதிய மாற்றங்கள் இத்துறையில் நிகழும் என்பதால் அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னை இந்துஸ்தான் அறிவியல், தொழில்நுட்ப நிறுவன ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் (பொறுப்பு) எம்.ஜெய்குமார்: ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்கில் மோட்டார் ஸ்போர்ட்ஸ், ஆட்டோ எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் வெஹிக்கிள்ஸ், ஆட்டோமொபைல் டிசைன், எலெக்ட்ரானிக்ஸ் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. தற்போது ஆட்டோமொபைல் மெயின்டனன்ஸ் தொடர்பான 3 பிஎஸ்சி படிப்புகள், ஆட்டோமொபைல் மேனேஜ்மென்ட் பற்றிய பிபிஏ படிப்பு ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இத்துறையின் வளர்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் இன்ஜினீயர்களின் தேவையும் அதிகமாக இருக்கும். இந்திய, பன்னாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமின்றி, பாதுகாப்புத் துறை, போக்குவரத்து நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கு இன்ஜினீயர், மேலாளர், தயாரிப்பு பொறியாளர், டிசைனர், தரப் பொறியாளர், ஆட்டோ எலெக்ட்ரீஷியன் என பல்வேறு பணிகளில் சேரலாம். 2026-ம் ஆண்டில் இத்துறையில் புதிதாக 6.50 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கு துறை நிபுணர்கள் பதில் அளித்தனர். நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வை கோவை கேபிஆர் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து வழங்கியது. முதல்நாள் நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/3jyDegN என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சி தினமும் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. தினந்தோறும் பல துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகின்றனர். இதில் பங்கேற்க கட்டணம் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x