Published : 25 Jul 2020 06:01 PM
Last Updated : 25 Jul 2020 06:01 PM

கரோனா காலத்தில் விவசாயத்தை நோக்கிக் குழந்தைகளைத் திருப்பும் சவால்: ஆசிரியரின் நூதன முயற்சி!

நஞ்சில்லா உணவே நம் அனைவரின் கனவாக இருக்கிறது. அது எல்லோருக்கும் அத்தனை சுலபத்தில் சாத்தியமாவதில்லை. நகரமயமாகி வரும் சூழலில், இடப்பற்றாக்குறை முக்கியப் பிரச்சினையாக உள்ளது. எனினும் முறையாகத் திட்டமிட்டால் எதையும் சாதிக்கலாம் என்கிறார் குளித்தலை அருகே உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர் பிருந்தா.

ஊரடங்கைப் பயனுள்ளதாக மாற்றவும் கரோனா காலத்தில் செல்போன், டிவி, ஆன்லைன் வகுப்புகள் என கேட்ஜெட்டுகளுடன் வாழும் குழந்தைகளை விவசாயத்தை நோக்கித் திருப்பவும் முடிவெடுத்தார் ஆசிரியர் பிருந்தா. ஒரு மாத மாடித்தோட்ட சவாலை முன்னெடுத்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர் பிருந்தா, ''எனக்கு சிறு வயதில் இருந்தே இயற்கை விவசாயத்தில் அதிக ஆர்வம் உண்டு. வீட்டில் மாடித் தோட்டத்தை ஆரம்பித்து, விவசாயம் செய்து வருகிறேன். காய்கறிகள் வளர்ப்பது குறித்து என்னுடைய யூடியூப் பக்கத்திலும் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறேன்.

பொதுவாக கடைகளில் பெரிய தக்காளி, பெரிய அளவில் வெங்காயம் என காய்கறிகள் அனைத்துமே பெரிதாகவே இருக்க வேண்டும், பூச்சி அரிக்காமல் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். இதனாலேயே பூச்சிமருந்து அடித்து, கலப்பினக் காய்களை விற்கின்றனர்.

ஆசிரியர் பிருந்தாவின் மாடித் தோட்டம்

சற்றே முயன்றால் நச்சு இல்லாத காய்களை நாமே உருவாக்கலாம். 20 நாட்களில் கீரை வளர்ந்துவிடும். 2 முதல் 3 மாதங்களில் காய்கள் விளைந்துவிடும். பெரிய இடம் இருந்தால் பழ வகைகள் கூட வைக்கலாம். வீட்டினருடன் இணைந்து தோட்டத்தைப் பராமரிக்கலாம்.

காலையில் எழுவது, குளித்துக் கிளம்பி, பள்ளி செல்வது என்றில்லாமல் தோட்டத்துக்குச் சென்று செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது என் மகன்களுக்கும் பிடித்திருந்தது. கரோனா காலத்தில் அவர்களுக்காகவே தேடித்தேடி நாட்டு விதைகளை வாங்கி வந்து விதைத்து, அவர்களைப் பராமரிக்கச் சொன்னேன். ''நம்ம வீட்ல இதைச் செய்யறோம், எல்லோர் வீட்டிலும் இப்டிப் பண்ணுவாங்களாம்மா?'' என்று மகன் கேட்டபோதுதான் எல்லோருக்கும் இதைக் கொண்டு செல்லலாமே என்று தோன்றியது.

எல்லோர் வீட்டிலும் தோட்டம் போட இடம் இருக்காது. அதனால் 'வீட்டுத் தோட்டம் அல்லது மாடித் தோட்டத்தில் இயற்கை விவசாயம்; சிறப்பாகச் செய்பவர்களுக்கு ஊக்கப் பரிசுகள்' என்ற யோசனையைக் கையில் எடுத்தேன்'' என்கிறார் ஆசிரியர் பிருந்தா.

சவால் விதிமுறைகள்
* விதை விதைத்ததில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்ப வேண்டும்.
*காய், கீரைச் செடிகளை மட்டுமே வளர்க்க வேண்டும்.
*தங்களின் வீடுகளில் மாடித் தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி.
*கண்டிப்பாக இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும்.
*ஏற்கனவே தோட்டம் வைத்து இருப்பார்கள் புதிதாக வைத்த செடிகளை மட்டுமே அனுப்ப வேண்டும்.
*குறைந்தது 5 முதல் 10 செடிகள் வைத்து இருக்க வேண்டும்.
*மேலே குறிப்பிட்ட நாட்களில்தான் விவசாயம் செய்தது எனப் புகைப்படங்களில் உறுதிப்படுத்த வேண்டும்.
*தோட்டத்தின் வீடியோ 2 நிமிடங்களுக்குள் இருக்குமாறு அனுப்ப வேண்டும்.

குழந்தைகளை ஊக்குவித்தால் சிறப்புப் பரிசுகள்
*தங்களின் தோட்டத்தில் குழந்தைகளுக்கு விவசாயம் குறித்துக் கற்றுக்கொடுத்து, அவர்களைக் கொண்டு தோட்டம் அமைத்து இருந்தால் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
* சிறந்த பரிசாகத் தோட்டத்திற்குத் தேவையான நாட்டு ரக விதைகள் மற்றும் குரோ பேக் (grow bag) வழங்கப்படும்.
* குழந்தைகளை வைத்துத் தோட்டம் போடுபவர்களுக்கு குழந்தைகளின் புகைப்படத்தோடு கூடிய விதை பென்சில்கள் பரிசுகளாக வழங்கப்படும்.

சவாலில் ஆர்வத்துடன் பங்கேற்கும் குழந்தைகள்

இதுகுறித்து மேலும் பேசும் அவர், ''மாடித்தோட்ட சவால் நிறைய பேரை ஈர்த்துள்ளதால், அதை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளேன். இந்த காலகட்டம் வரை உள்ள நாட்களில் வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைத்து, அதைப் படம் எடுத்து அனுப்ப வேண்டும்.

வாட்ஸ் அப், யூடியூப் மூலம் பார்த்த நண்பர்கள் கன்னியாகுமரி, நாகை, திருவள்ளூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தெல்லாம் இந்த சவாலில் பங்குகொள்கின்றனர். நம் குழந்தைகளுக்கு விவசாயம் குறித்து அதிகம் தெரிவதில்லை. அதை மாற்ற எண்ணி, குழந்தைகளை ஊக்குவித்தால் சிறப்புப் பரிசுகள் வழங்க முடிவு செய்து, அறிவித்துள்ளேன்.

எங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பார்த்துச் சென்றபின்னர், 7 பேர் தங்கள் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்துள்ளனர். இது இன்னும் விரிந்து, இயற்கை வேளாண்மை தழைக்க வேண்டும், அதற்காகவே இந்தப் போட்டி'' என்று நம்பிக்கை விதை விதைக்கிறார் ஆசிரியர் பிருந்தா.

தொடர்புக்கு: ஆசிரியர் பிருந்தா- 96593 44158

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x