Published : 25 Jul 2020 07:55 AM
Last Updated : 25 Jul 2020 07:55 AM

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர் கருத்து கேட்ட பின்னரே முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பதற்கான முடிவு எடுக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் விழா ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், ‘ஆன்லைன்’ மூலம் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், ‘ஆன்லைன்’ வசதி இல்லாததால், தற்போது தற்காலிகமாக மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பது குறித்து மக்கள் கருத்தறிந்து தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பதற்கான முடிவு எடுக்கப்படும். தற்போது கரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியமில்லை.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு படிப்படியாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய வசதி உள்ளது. ஆனால் தற்போது 3.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. உபரியாக கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது, என்றார். விழாவில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x