Last Updated : 24 Jul, 2020 01:40 PM

 

Published : 24 Jul 2020 01:40 PM
Last Updated : 24 Jul 2020 01:40 PM

50 ஆயிரம் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு: அட்சயப் பாத்திரம் திட்டம் புதுச்சேரியில் விரைவில் தொடக்கம்

புதுச்சேரியில் 50 ஆயிரம் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு தரும் அட்சயப் பாத்திரம் திட்டம் இக்கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று நிகழ்த்திய சட்டப்பேரவை உரையில் கல்வி தொடர்பான முக்கிய அம்சங்கள்:

* மத்திய திட்டக்குழு கல்விக் குறியீடு தொடர்பான தர வரிசையில் யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

* மனித வளமேம்பாட்டு அமைச்சக செயல்திறன் தர நிர்ணயக் குறியீட்டில் ஆயிரத்துக்கு 785 மதிப்பெண்களை புதுச்சேரி பெற்றுள்ளது. முன்பு பெற்ற மதிப்பெண்களை விட இது 14 விழுக்காடு அதிகம்.

* புதுச்சேரியில் படிக்கும் 50 ஆயிரம் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவைத் தரும் அட்சயப் பாத்திரம் திட்டம் இக்கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும். இதற்காகத் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

* 10, 12-ம் வகுப்புத் தேர்வுகளில் கிராமப் பகுதிகளில் 90 சதவீதத்துக்கு மேலும், நகரப்பகுதிகளில் 100 சதவீதத் தேர்ச்சியும் பெற்ற 53 அரசுப் பள்ளிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1.06 கோடி தரப்பட்டுள்ளது.

* பள்ளிகளில், ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கற்பிக்க 520 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* கேலோ இந்தியா திட்டத்தில் ரூ.5 கோடியில் சாரதாம்பாள் நகரில் கட்டப்படும் நீச்சல் குளம் வரும் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்.

* இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடியில் கட்டப்படும் செயற்கை ஓடுகளம் நடப்பாண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.

* புதுச்சேரி பொறியியல் கல்லூரியைப் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் விரைவில் செயல்படத் தொடங்கும்.

இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x