Published : 24 Jul 2020 01:23 PM
Last Updated : 24 Jul 2020 01:23 PM

பாழடைந்த நிலையில் 22% பள்ளிக் கட்டிடங்கள்: தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்

நாடு முழுவதும் பாழடைந்த நிலையில் 22 சதவீதப் பள்ளிக் கட்டிடங்கள் இருப்பதாகத் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணையம் சார்பில், 12 மாநிலங்களில் உள்ள 26,071 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

''பாதுகாப்பான பள்ளிச் சூழல்'' என்ற தலைப்பில் பல்வேறு காரணிகள் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் வடக்கு, கிழக்கு, தெற்கு மட்டும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வு முடிகளின்படி, ''22 சதவீதப் பள்ளிக் கட்டிடங்கள் பழமையானதாகவோ, பாழடைந்த நிலையிலோ இருக்கின்றன. 31 சதவீதப் பள்ளிகளின் கட்டிடங்களில் வெடிப்புகள் உள்ளன.

ரயில்வே தடங்களுக்கு அருகில் 19 சதவீதப் பள்ளிகள் அமைந்துள்ளன. இதில் ஒரே ஒரு சதவீதப் பள்ளிகளில் மட்டுமே சாலைகளில் வேகத் தடுப்பான் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல 74 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே கழிப்பறைகளின் உள்ளே தண்ணீர் வசதி உள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெளியில் இருந்து தண்ணீரைக் கொண்டுவர வேண்டி உள்ளது. மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு உகந்த கழிப்பறைகள் 49 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே உள்ளன.

பார்வையற்ற குழந்தைகளுக்கு 32 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே போதுமான உபகரணங்கள் உள்ளன. அதேபோல 33 சதவீதப் பள்ளிகளில் உரிய மின்சார வசதி செய்யப்பட்டிருக்கவில்லை.

முறையான போக்குவரத்து வசதிகளை 28 சதவீதப் பள்ளிகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. அதில் 30 சதவீதம் அரசுப் பள்ளிகள், 70 சதவீதம் தனியார் பள்ளிகள்.

57 சதவீதக் குழந்தைகளுக்கு மட்டுமே, மதிய உணவின் தரம் திருப்தி அளிப்பதாக உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில், ''இது அபாயகரமான சூழலாகும். மேற்குறிப்பிட்ட காரணிகள் குழந்தைகளின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பில் அபாயத்தை ஏற்படுத்துகின்றன'' என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x