Last Updated : 24 Jul, 2020 12:01 PM

 

Published : 24 Jul 2020 12:01 PM
Last Updated : 24 Jul 2020 12:01 PM

புதுச்சேரியில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க புதிய சான்றிதழ்களை எவ்வாறு பெறுவது?-ஆட்சியர் விளக்கம்

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தேவையான குடியிருப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க இருப்பிடம், குடியிருப்பு, சாதிச் சான்றிதழ்களைப் பெற முடியாமல் புதுச்சேரி, காரைக்கால் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். இதையடுத்துப் பழைய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க அனுமதி தரப்பட்டது. மேலும் புதிய சான்றுகளை இணைக்க ஒரு மாத அவகாசம் தரப்பட்டது.

இந்நிலையில் புதிதாகச் சான்றிதழ்களை எவ்வாறு பாதுகாப்புடன் பெறுவது என்பது தொடர்பாக ஆட்சியர் அருண் கூறியதாவது:

''புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருவாய்த் துறை மூலம் தரப்படும் குடியிருப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள் தற்போது இணையத்தின் மூலமே தரப்படுகின்றன.

இம்முறை கடந்த ஜனவரி முதலே அந்தந்தப் பள்ளிகளின் மூலமாக மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு பள்ளிகள் மூலம் பெறப்பட்ட இணையவழி விண்ணப்பங்களைப் பரிசீலித்துச் சான்றிதழ்கள் தரப்படுகின்றன.

சான்றிதழ்களுக்காக மக்கள் தாலுக்கா அலுவலகங்களில் தினமும் கூடுகின்றனர். கரோனா காலத்தில் கூட்டம் கூடுவது பாதுகாப்பற்ற செயல். மக்கள் சான்றிதழ்களுக்காக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கணினி அல்லது கைப்பேசி மூலமாகவோ அல்லது அருகில் உள்ள பொது சேவை மையத்தின் மூலமாகவோ சான்றிதழ்களைப் பெறலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பாக சந்தேகம் இருந்தால் தாலுக்கா அலுவலகங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கலாம்''.

இவ்வாறு ஆட்சியர் அருண் தெரிவித்தார்.

இதுதொடர்பான எண்கள்:
புதுச்சேரி தாலுக்கா- 0413 2356314,
உழவர்கரை தாலுக்கா 0413 2254449,
வில்லியனூர் தாலுக்கா 0413 2666364,
பாகூர் தாலுக்கா 0413 2633453.

இணைய முகவரி: https://edistrict.py.gov.in/

இதே இணைய முகவரியைப் பயன்படுத்தி காரைக்காலைச் சேர்ந்த மாணவர்களும் சான்றிதழைப் பெற முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x