Last Updated : 23 Jul, 2020 06:37 PM

 

Published : 23 Jul 2020 06:37 PM
Last Updated : 23 Jul 2020 06:37 PM

இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலி: தெருவிளக்கில் படித்து பிளஸ் 2-வில் சாதித்த மாணவிக்கு இடம் வழங்க முன்வந்த கல்லூரிகள்

மதுரை

இந்து தமிழ் ஆன்லைன் செய்தி எதிரொலியாக மதுரையில் தெருவிளக்கில் படித்து பிளஸ் 2-வில் சாதித்த மாணவிக்கு இடம் வழங்க தனியார் கல்லூரிகள் முன்வந்துள்ளன.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள காட்டுநாயக்கர் குடியிருப்பைச் சேர்ந்த கணேசன், லட்சுமி தம்பதியின் 3-வது மகள் தேவயானி.

அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து பிளஸ்-2ல் 600-க்கு, 500 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவரது பெற்றோர் வீடு, வீடாகச் சென்று குறி சொல்லும் தொழில் புரிந்து,மகளை படிக்க வைத்தனர்.

இவரது மூத்த சகோதரி ஏற்கெனவே பிளஸ் 2-வில் தேர்வாகியும் குடும்ப வறுமையால் மேல் படிப்பைத் தொடர முடியவில்லை. தேவயானிக்கும் இச்சூழல் நேர்ந்தாலும், அவர் மேற்படிப்பை முடித்து குடிமைப் பணிகள் தேர்வெழுதும் ஆசையில் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன், மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்.

மாணவின் நிலை பற்றி இந்து தமிழ் ஆன்லைனில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மதுரையிலுள்ள அரசு உதவி பெறும் இரண்டு மகளிர் கல்லூரிகள் தேவயானிக்கு கல்லூரியில் இடம் வழங்க முன்வந்தது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடமும் பேசி, மாணவி விரும்பும் பாடப்பிரிவில் கட்டணமின்றி சேர்க்க நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தொகுதியைச் சேர்ந்த மாணவி என்ற முறையில் திமுக எம்எல்ஏ சரவணன் நேரில் மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரை வாழ்த்தி கல்லூரி படிப்புக்கான செலவை ஏற்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மாநில துணை பொதுச் செயலர் அமுதன் மாணவிக்கு பண உதவி செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த ரிசர்வ் வங்கி அதிகாரி சரவணன் உள்ளிட்ட சிலரும் தேவயானியின் கல்லூரி படிப்புக்கு உதவ முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கதது.

உதவ முன்வந்த கல்லூரி நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் மாணவி குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x