Last Updated : 23 Jul, 2020 05:16 PM

 

Published : 23 Jul 2020 05:16 PM
Last Updated : 23 Jul 2020 05:16 PM

'அக்னிச் சிறகுகள்' நூலை குறுகிய நேரத்தில் பிழையின்றி வாசித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த திருச்சி மாநகராட்சி பள்ளிச் சிறுமிகள்

குடியரசு முன்னாள் தலைவரான மறைந்த அப்துல் கலாம் எழுதிய 'அக்னிச் சிறகுகள்' புத்தகத்தை, இரண்டரை மணிநேரத்தில் பிழையின்றி படித்துக் காட்டி சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர், திருச்சி மாநகராட்சி பள்ளிச் சிறுமிகள்.

ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. அரசும், மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இந்தக் காலக்கட்டத்தில் 'விழித்திரு- வீட்டிலிரு- விலகி இரு' ஆகிய வார்த்தைகளைக் கடைபிடிக்குமாறும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கு செல்வது வழக்கம். ஆனால், தற்போது சுற்றுலாத் தலங்களோ, கோயில்களோ, பூங்காக்களோ திறக்கப்படாத நிலையில், பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளுக்கு ஒருவித அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், அதேவேளையில் நேரத்தை பயனுள்ள முறையில் மகிழ்ச்சியுடன் செலவழிக்கும் நோக்கிலும் புத்தகங்கள் வாசிப்பு, ஓவியம் வரைதல், பாட்டுப் பாடுதல், நடனமாடுதல், கதை- கவிதை- கட்டுரை எழுதுதல், மொழிகள் அறிதல் என தங்களுக்கு பிடித்தவைகளில் ஈடுபட வேண்டும் என்று மனநல ஆலோசகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் விடுமுறை நாட்களை நல்ல முறையில் செலவழிக்கும் வகையில், நல்ல புத்தகங்களை வாங்கிப் படிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அந்த வகையில், பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் 4-ம் வகுப்பு முடித்து 5-ம் வகுப்புக்குச் செல்லத் தயாராக உள்ள சிறுமிகள் த.யோகிதா, செ.ஸ்ரீலேகா, மோ.இமயஜோதி ஆகிய 3 பேரும், குடியரசின் முன்னாள் தலைவரான மறைந்த அப்துல் கலாம் எழுதிய 'அக்னிச் சிறகுகள்' நூலை வாங்கிப் படித்து வந்தனர்.

தொடர்ந்து, பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம், தலைமை ஆசிரியர் பூ.ஜெயந்தி, இடைநிலை ஆசிரியை ஹ.புஷ்பலதா மற்றும் 'ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்டு' நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில், 'அக்னிச் சிறகுகள்' நூலை பிழையின்றி 2.31 மணி நேரத்தில் முழுமையாக படித்துக் காட்டினர்.

இதை 'ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்டு' நிறுவனர் டிராகன் ஜெட்லி மற்றும் ஒருங்கிணைப்பாளர் பக்கிரிசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழையும், கோப்பையையும் சிறுமிகளுக்கு வழங்கிப் பாராட்டினர்.

இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம் கூறியதாவது:

"ஊரடங்கால் பள்ளிகள் திறப்பு தள்ளிக் கொண்டே போவதால், மாணவ- மாணவிகளிடத்தில் படிக்கும் பழக்கத்தில் தொய்வு நேரிட வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், தொடர் நீண்ட இந்த விடுமுறை நாட்களில் நாளிதழ்கள், நூல்கள் ஆகியவற்றை தினமும் வாசித்தால்தான், பள்ளி தொடங்கிய பிறகு பாடங்களைப் படிக்க மாணவ- மாணவிகளுக்கு எளிதாக இருக்கும்.

மேலும், விடுமுறை காலத்தையும் வீணாக அன்றி, நல்ல முறையில் செலவழித்ததாக அமையும். எனவேதான், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்க அறிவுறுத்தியிருந்தோம்.

அதன்படி, 3 சிறுமிகளும் 'அக்னிச் சிறகுகள்' நூலை வாங்கி, தினமும் படித்து வந்துள்ளனர். மேலும், என்னைத் தொடர்பு கொண்டு, அந்த நூலை பிழையின்றி குறுகிய நேரத்தில் படித்துக் காட்டுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்தே இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறுமிகளின் இந்தச் செயல் பிற மாணவ- மாணவிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x