Last Updated : 23 Jul, 2020 11:25 AM

 

Published : 23 Jul 2020 11:25 AM
Last Updated : 23 Jul 2020 11:25 AM

கல்வி உரிமைச் சட்டம் நலிவடைந்த குழந்தைகளைச் சென்றடைகிறதா?

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் நிலுவையில் உள்ள 40 சதவீத்தை மாநில அரசு உடனடியாக வழங்கும்படி தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக் கல்விக் கட்டணத்தை பெற்றோரிடம் இருந்து தனியார் பள்ளிக்கூடங்கள் பெறத் தடை ஏதும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. தவணை முறையில் மூன்று கட்டமாக 75 சதவீத கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் இருந்து வசூலிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் நீட்சியாகத் தனியார் பள்ளிகள் பெற்றோர்களைக் கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்தும்படி நிர்பந்தித்து வருகின்றன. இதனால் பெற்றோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இது ஒரு புறம் இருக்க, மறு புறம் பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்பது இதுவரை தெரியாத காரணத்தினால் பெற்றோர் கட்டணம் செலுத்த மறுப்பதாகப் பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, கரோனா கால இடர்ப்பாடுகளுக்கு இடையில் கல்விக் கட்டணத்தைச் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திப்பதற்குப் பதில் மாற்று யோசனையைப் பள்ளிகள் மாநில அரசுக்கு வழங்கி இருக்கின்றன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் 25 சதவீத சீட்டுகளுக்கு உரிய தொகை இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதனைப் பள்ளிகளுக்கு மாநில அரசு உடனடியாக வழங்கினால் தற்காலிகமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்கிறது பள்ளித் தரப்பு.

8.5 லட்சம் மாணவர்களுக்கு கட்டாய இலவச கல்வி

ஆதரவற்றவர், குழந்தைத் தொழிலாளி, எச்.ஐ.வி. பாதித்தவர், பட்டியலினத்தவர், மனவளர்ச்சி குன்றியவர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆகிய அடிப்படையில் நலிவடைந்தோராக கருதப்படும் குழந்தைகளுக்குக் கட்டாய இலவசக் கல்வியானது அனைத்து தனியார் பள்ளிகளிலும் வழங்க கல்வி உரிமைச் சட்டம் வழி வகை செய்துள்ளது. இதன்படி 6 முதல் 14 வயது வரையிலான நலிவடைந்த குழந்தைகளுக்குக் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8.5 லட்சம் மாணவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் ஆண்டு தோறும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய நிதியில் 40 சதவீதம் நிலுவையில் உள்ளது. இதில் மத்திய அரசு தன்னுடைய பங்கை மாநில அரசிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் மாநில அரசுதான் தொகையைப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யத் தாமதிப்பதாகவும் தனியார் பள்ளிக் கல்வி சங்கங்கள் கூறுகின்றன. மீதமுள்ள தொகையை உடனடியாக வழங்கும்படி மாநில அரசுக்கு தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரிடம் உரையாடினோம்..

அரசுப் பள்ளிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்!

"அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற முறையில் கல்வி உரிமைச் சட்டத்தின் மீது எனக்கு சில விமர்சனங்கள் உண்டு. 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு உறுதி செய்வது சிறப்பு. ஆனால், அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதற்குப் பதில் தனியார் பள்ளிகளைப் புனிதப்படுத்தும் திட்டம் இது. எதற்காகத் தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கி அங்கு நலிந்த மக்களின் குழந்தைகள் கல்வி பெற வழி வகை செய்ய வேண்டும்? அதற்குப் பதில் அந்தத் தொகையை அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்குச் செலவழித்தால் நம்முடைய அரசுப் பள்ளிகளைப் பலப்படுத்தலாமே. ஆகையால் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியாக இதை எங்களால் எடுத்துக் கொள்ள முடியாது. அரசுப் பள்ளிகளுக்கு இதை ஒதுக்கும்பட்சத்தில் அனைத்து மக்களும் அரசுப் பள்ளிகளைத் தேடிவரும் இடமாக அதை மாற்ற முடியும். அதுவே உண்மையாகக் கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என்கிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் சுரேஷ்.

பாகுபாடு கூடாது!

அரசுப் பள்ளிக்கு வந்து சேர வேண்டிய தொகை இது என்ற கருத்து ஒரு புறம் இருக்க, இது தொடர்பாகத் தனியார் பள்ளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மதுரையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் தாளாளர் பகிர்ந்துகொண்டார்.

"தனியார் பள்ளிகள் என்றாலே வசூல் வேட்டையில் ஈடுபடுபவை, பெற்றோரை மிரட்டிக் கட்டணம் வசூலிப்பவை என்கிற பார்வை நிலவுகிறது. ஆனால், மிதமான கல்விக் கட்டணத்தில் தொடங்கி வானளாவிய கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகள் என பல ரக தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. என்னைக் கேட்டால் அரசுப் பள்ளிகள் சிறப்பாக இயங்குவதை அரசு உறுதி செய்தால் என்னைப் போன்றோர் தனியார் பள்ளிகளையே தொடங்கி இருக்க மாட்டோம். அந்த வகையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கும் தொகையை அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்குச் செலவழிப்பதாக மாற்றினால் நிச்சயம் வரவேற்பேன்.

ஆனால், இப்போது நிதர்சனத்தைப் பற்றிப் பேச வேண்டி இருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி அந்த ஆண்டில் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கைக்கு இதுவரை தொகை வழங்கப்படவில்லை. 2013 ஆம் ஆண்டில் இருந்து இலவச மாணவர் சேர்க்கைக்கு அரசு எங்களுக்குத் தொகை அளித்து வருகிறது. ஆனால், ஆரம்பம் முதலே ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுவரை தாமதமாகத்தான் தனியார் பள்ளிகளுக்கு அரசு தொகை அளித்து வருகிறது. 2018-19 ஆம் கல்வியாண்டுக்கு உரிய தொகையே கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் வந்து சேர்ந்தது. அதை வைத்துத்தான் ஆசிரியர்களுக்குக் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கினோம். இதிலும் தொடக்கப் பள்ளிகளுக்கு இந்தத் தொகை இதுவரை சென்றடையவில்லை. இந்நிலையில் 2019~20 கல்வியாண்டுக்கான பணம் இதுவரை வரவே இல்லை. அந்தத் தொகையும் வந்து சேர்ந்தால் ஓரளவு சூழலைச் சமாளிக்கலாம். கல்வியாண்டு தொடங்கி மாணவர் சேர்க்கை முடிந்து ஓரிரு மாதங்களுக்குள் அரசு ஒதுக்கும் தொகை பள்ளிகளுக்கு வந்து சேர வழி செய்ய வேண்டும்.

இது தவிர இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் நன்மை யாருக்குப் போய்ச் சேர்கிறது என்பதிலும் சிக்கல்கள் நிலவுகின்றன. உதாரணத்துக்கு எங்களுடைய பள்ளி அமைந்திருக்கும் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் அருகில் ஒரு குடிசைப் பகுதி உள்ளது. அங்கிருந்து கல்வி உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு மாணவர்கூட இதுவரை எங்கள் பள்ளியைத் தேடி வரவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.

அதற்குக் காரணம் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற முறை பின்பற்றப்படுவதுதான். பெருவாரியான ஏழை ஒடுக்கப்பட்ட பாமர மக்களுக்கு இந்தத் தகவலே சென்றடைவதில்லை. குறுக்கு வழியில் பள்ளி நிர்வாகம் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டி ஆன்லைன் வழியில் வெளிப்படையான விண்ணப்ப முறையை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது சரியான வழிமுறையாகத் தோன்றினாலும் உண்மையான நலிவடைந்த மக்களை இந்தத் திட்டம் சென்றடைவதில்லை. இதற்குத் தீர்வு காண ஆண்டுதோறும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி இடங்களுக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்களை பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன்னதாக இது குறித்த விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த வேண்டும். அதேபோல இந்தக் குழந்தைகள் ஆசிரியர்களால், சக மாணவர்களால் சமமாக நடத்தப்பட வேண்டும். 'நானெல்லாம் என்னுடைய பிள்ளைக்கு முழு ஃபீஸ் கட்டுறேன்...எனக்கு இதைக்கூடச் செய்ய மாட்டீங்களா?' என்று பேசும் பெற்றோர்களும் உண்டு. இது மிகவும் தவறான அணுகுமுறை. அவ்வாறு இலவசக் கல்வி பெறும் குழந்தைகளுக்கும் கட்டணம் செலுத்தும் குழந்தைகளுக்கும் இடையில் எந்த விதத்திலும் பாகுபாடு காட்டக் கூடாது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x