Last Updated : 23 Jul, 2020 07:25 AM

 

Published : 23 Jul 2020 07:25 AM
Last Updated : 23 Jul 2020 07:25 AM

பிளஸ் 2 மாணவர்களின் மடிக்கணினிகளில் இ-பாடங்களை பதிவேற்றுவதில் தாமதம் ஏன்?- தமிழக பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

கோப்புப் படம்

சென்னை

அரசுப் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இ-பாடங்களை பதிவேற்றுவதில் தாமதமாவது குறித்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பிளஸ் 2 பாடங்களை வீடியோவாக பதிவுசெய்து, மாணவர்களுக்கு ‘இ-பாடங்களாக’ வழங்கவும், மற்றவகுப்புகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் பிளஸ் 2 மாணவர்களின் மடிக்கணினியில் இ-பாடங்களை பதிவேற்றம் செய்யும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த 14-ம்தேதி தொடங்கிவைத்தார். ஆனால்,சில ஆய்வகங்களில் போதிய இணைய வசதிகள் இன்னும் வராததால், இப்பணியில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள 2,939அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொருபள்ளிக்கும் 20 கணினிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஒருங்கிணைந்த ‘கிளையன்ட் சர்வர்’ மூலம் கற்றல், கற்பித்தல் வளங்கள் சிறந்தமுறையில் தயாரிக்கப்பட்டன. ஆனால், இணையதளவேகம் குறைவாக (2 எம்பிபிஎஸ்) இருப்பதால் இத்திட்டத்தின் முழுமையான பலன் கிடைப்பதில்லை.

இந்நிலையில், கரோனா பாதிப்பால் வகுப்பறை கற்பித்தலை வீடியோவாக பதிவுசெய்து ஆய்வகம் மூலம் பிளஸ் 2 மாணவர்களின் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்துதர கல்வித் துறை உத்தரவிட்டது. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் உள்ள வீடியோக்களின் அளவு 53 ஜிபி வரை இருப்பதால் குறைந்த இணைய வேகத்தில் அதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட சில பாடங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்து தரப்பட்டுள்ளன.

பல ஆய்வகங்களில் இணைய சேவைக்கான ‘ஃபயர்வால்’ தொழில்நுட்பம் இயங்காதது, யுபிஎஸ் கருவி பழுது போன்ற சிக்கல்களும் உள்ளன. இதை சரிசெய்யாவிட்டால், ரூ.500 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்ட இத்திட்டமே பயனற்று போய்விடும். எனவே, இணைய வேகத்தை 100 எம்பிபிஎஸ் அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். கோளாறுகளை உடனுக்குடன் சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.

மேலும், பிளஸ் 2 பாடங்களின்வீடியோக்களை யூ-டியூப் வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால், மாணவர்களே பதிவிறக்கம் செய்துகொள்வார்கள். கரோனா பரவல்அதிகம் உள்ள சூழலில், மடிக்கணினியில் பதிவேற்றம் செய்துகொள்வதற்காக மாணவர்கள் வர வேண்டிய அவசியம் ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் முதல்முறையாக நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து, அவற்றை சரிசெய்ய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, தற்போதைய அசாதாரண சூழலில் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்த திட்டமிடப்பட்டது. நாள் முழுவதும் 1 முதல் 11-ம் வகுப்பு வரையான பாடங்களுக்கும், நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகளுக்குமே நேரம் சரியாக இருப்பதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினியில் இ-பாடங்களை பதிவேற்றம் செய்துதர முடிவானது.

ஆய்வகத்தின் இணையதள வேகம் குறைவாக இருப்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. எனவே, பென்டிரைவ் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை பதிவேற்றம் செய்யவும், இதர மாற்று வழிகளை பின்பற்றவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைய வேகத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x