Last Updated : 21 Jul, 2020 07:50 AM

 

Published : 21 Jul 2020 07:50 AM
Last Updated : 21 Jul 2020 07:50 AM

கணினி தொழில்நுட்பத்தால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் பார்வைத் திறனற்ற மாணவி சாதனை

வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கணினியில் தட்டச்சு செய்யும் ஓவியா.

கடலூர்

நெய்வேலி 19-வது வட்டத்தில் வசித்து வரும் என்எல்சி நிறுவன பொறியாளர் விஜயராஜ்- கோகிலா தம்பதியரின் மகள் ஓவியா(17). முழுமையாக பார்வைத் திறனற்றவரான ஓவியா, நெய்வேலி 17-வது வட்டத்தில் உள்ள ஜவகர் மேல்நிலைப் பள்ளியில்(சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை கணினி வழியாக எழுதி, 500-க்கு 447 மதிப்பெண்கள் (86.4 சதவீதம்) பெற்று சாதனை படைத்துள்ளார்.

எல்கேஜி படிக்கும்போது ஓவியாவுக்கு 'ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா' என்ற பார்வைக் குறைபாடு ஏற்படவே, அதற்கு மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனாலும், படிப்படியாக பார்வைக் குறைபாடு அதிகரித்துள்ளது.

பார்வைக் குறைபாட்டுடன் கடலூர் மடப்பள்ளத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். 2-ம் வகுப்பை திருச்சி சிவானந்தா பாலாலயா ஒருங்கிணைந்த பள்ளியில் படித்தார்.

பின்னர், என்எல்சி இந்தியா நிர்வாகத்தின் உதவியுடன் அவரது தந்தை சென்னைக்கு பணி மாற்றம் பெற்று, மந்தைவெளிப் பகுதியில் உள்ள சில்வர் அன்ட் ஸ்பிரிங் பள்ளியில் 3-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

அப்போது, சங்கர் சுப்பையா என்ற தன்னார்வலர் ஓவியாவுக்கு லேப்டாப்பில், என்விடிஏ(NVDA) என்ற சாப்ட்வேர் மூலம் தட்டச்சு கற்றுத் தந்தார். பாடத்தை ஆசிரியர் கூறக்கூற ஓவியா லேப்டாப்பில் நன்றாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டார். மேலும், ஒரு பொருளை தொட்டுப் பார்த்து உணர்வதற்கும் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர், நெய்வேலி 17-ம் வட்டத்தில் உள்ள ஜவகர் மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பில், அப்பள்ளியின் முதல்வர் யசோதா சேர்த்துக்கொண்டார். அப்போது ஓவியா அறிவியல், கணித பாடங்களை டேக்டைல் புத்தகம் (TACTILE BOOK) மூலம் தொட்டுப் பார்த்து அறிந்து, ஒரு ஆசிரியர் கேள்விகளை படித்துக் காட்ட 6-ம் வகுப்பு வரை தானாகவே தேர்வு எழுதினார்.

7-ம் வகுப்பு வரும் போது 100 சதவீதம் பார்வையில்லாமல் போனது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தால் தொடர்ந்து அவர் மடிக்கணினியில் தேர்வுகளை எழுதினார். நடந்து முடிந்த கல்வி யாண்டில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை கணினி மூலம் எழுதி ஓவியா சாதனை படைத்துள்ளார்.

“ஆசிரியர்களின் ஊக்கமும், பெற்றோரின் தூண்டுதலும் என் வெற்றிக்கு காரணம். நன்கு பயின்று ஐஏஎஸ் ஆக வேண் டும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் தொழில்நுட்பம் மூலம் படிக்கும் வசதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கூறும் ஓவியா, பிளஸ் 1 படிப்பை தன் தாயார் கோகிலாவுடன் கோயம்புத்தூரில் தங்கி, அங்குள்ள பள்ளி ஒன்றில் பயில உள்ளார். அவர் எண்ணப்படியே ஐஏஎஸ் ஆக ‘இந்து தமிழ் திசை’ வாழ்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x