Last Updated : 20 Jul, 2020 05:21 PM

 

Published : 20 Jul 2020 05:21 PM
Last Updated : 20 Jul 2020 05:21 PM

ஏழை மாணவர்களுக்குக் கல்லூரிகளில் அனைத்துக் கல்விக் கட்டணமும் ரத்து; எல்லா மாணவர்களுக்கும் இலவச விண்ணப்பம்: புதுச்சேரி முதல்வர் அதிரடி

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் அனைத்துக் கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்து இலவசமாகக் கல்வி வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9 ஆயிரம் கோடிக்குப் பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி இன்று தாக்கல் செய்தார்.

அதில் கல்வி சார்ந்த முக்கிய அம்சங்கள்:

'' * புதுச்சேரியில் தற்போது மாணவர்களுக்குக் காலை வேளைகளில் பால் வழங்கப்பட்டு வருகிறது. இது மேம்படுத்தப்பட்ட டாக்டர் கலைஞர் கருணாநிதி காலைச் சிற்றுண்டி மற்றும் ஊட்டச்சத்துத் திட்டமாக விரிவுபடுத்தி இட்லி, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்படும். இத்திட்டம் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ல் தொடங்கப்படும்.

* கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிப்படைவதைக் குறைக்கும் வகையில் தொலைக்காட்சி, சமூக வானொலி மற்றும் இணையவழிக் கற்பித்தல் போன்ற பல்வேறு வழிகளில் கல்வி சென்றடைய இந்த கல்வி ஆண்டில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ ஒன்றும் அமைக்கப்படும்.

* அங்கன்வாடிகள், அருகாமையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

* 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லாக் கைக்கணினி (டேப்லெட்) வழங்கப்படும்.

* ரூ.4 கோடி செலவில் புதிய கல்வித் தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடங்கப்படும்.

* ஆராய்ச்சி மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.70 ஆயிரம் இந்த ஆண்டில் வழங்கப்படும். மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக பெருந்தலைவர் காமராசர் நல நிதி என்ற சிறப்பு நிதி தொடங்கப்படும்.

* லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வி நிறுவனப் பகுதிகளை ஒன்றிணைத்து மகாத்மா காந்தி கல்வி நகரம் நிறுவப்பட்டு, அதற்கான திட்ட வரைபடமும் தயார் செய்யப்படும்.

* ஏனாமில் கணினிப் பொறியியலில் சிறப்பு வாய்ந்த புதிய பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும் பொறியியல் கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும்.

* சட்டக் கல்லூரியை தேசியச் சட்டப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து ஒப்புதல்களையும் பெறும் பணிகள் இந்த நிதி ஆண்டிலேயே முடிக்கப்படும்.

* பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 4 புதிய இளங்கலைப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.

* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் பயில்வதற்காக இந்த ஆண்டு விண்ணப்பக் கட்டணங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

* கல்லூரிகளில் செலுத்தப்படும் இதர வகைக் கல்விக் கட்டணங்களில் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். மாஹேவில் சமுதாயக் கல்லூரி அமைக்கப்படும்.

* தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் கைக்கணினி (டேப்லெட்) தரப்படும்''.

இவ்வாறு புதுச்சேரி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x