Published : 20 Jul 2020 07:00 AM
Last Updated : 20 Jul 2020 07:00 AM

கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றோர் குறைவு; பொறியியல் கட்-ஆஃப் குறைய வாய்ப்பு- கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தகவல்

நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் எனவும், சிபிஎஸ்இயில் பயின்ற மாணவர்களுக்கு அதிகஅளவில் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கல்வி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 7.9 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 92.3 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். அதேநேரம் புதிய பாடத்திட்டம், வினாத்தாள் கடுமை உட்படபல்வேறு காரணங்களால் அதிகமதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட சரிந்துள்ளது.

அதன்படி, 48 சதவீத மாணவர்கள் 350 மதிப்பெண்களுக்கும் குறைவாகவும், நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு கணித பாடம் 100 சதவீதம், இயற்பியல், வேதியியலுக்கு தலா 50 சதவீதமும் வெயிட்டேஜ் அளித்து கட்-ஆஃப் கணக்கிடப்படும். தற்போது இந்த பாடங்களில் சராசரியான மதிப்பெண்களையே மாணவர்கள் பெற்றுள்ளனர். இதனால் நடப்பு ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:

புதிய பாடத்திட்டம், தேர்வுமுறை மாற்றங்களால் நடப்பு ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள் கடந்த ஆண்டைவிட ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன.

இதனால் பொறியியல் சேர்க்கையில் கடந்த ஆண்டைவிட சராசரியாக 5 மதிப்பெண் வரைகட்-ஆஃப் குறையும். அண்ணாபல்கலைக்கழகம் உட்பட முதல்தரவரிசையில் இருக்கும் கல்லூரிகளில் 1 முதல் 2 மதிப்பெண் வரையும் அதற்கடுத்த படிநிலைகளில் உள்ள கல்லூரிகளில் 2 முதல் 5 வரையும் கட்-ஆஃப் சரியக்கூடும். அதேபோல், எம்பிசி பிரிவில் 3 முதல் 8 மதிப்பெண் வரையும் கட்டிடவியல், இயந்திரவியல் பாடப்பிரிவுகளில் 6 மதிப்பெண் வரையும் கட்-ஆஃப் குறையும். அதேநேரம் கணினி அறிவியல் உட்பட தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களின் கட்-ஆஃப் சற்று உயரும்.

மேலும், சிபிஎஸ்இ மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பரவலாக நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளதால் அவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். புதிய பாடத்திட்டம், வினாத்தாள் கடுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிக
மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x