Published : 19 Jul 2020 01:23 PM
Last Updated : 19 Jul 2020 01:23 PM

அடுத்த தலைமுறைக்கான உயர்நிலைக் கல்வியைக் கட்டமைப்பது எப்படி? - கல்வியாளர்கள் கலந்து கொண்ட காணொலி வழி ஆலோசனைக் கூட்டம்

கல்வியாளர்கள் கூட்டம்

மாறி வரும் சூழலில் உயர் கல்வியில் அடுத்த தலைமுறைக்கான கல்வி முறையைக் கட்டமைப்பது குறித்து 2021 பிப்ரவரியில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பால் ஏற்பாடு செய்யப்படும் இந்த கருத்தரங்கில் உலக அளவிலான துணை வேந்தர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் 250 பேர் தங்களது ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துப் பேசவிருக்கிறார்கள். இது தொடர்பாக, தமிழக துணை வேந்தர்கள் மற்றும் பன்னாட்டு கல்வியாளர்கள் கலந்துகொண்ட காணொலி வழி ஆலோசனைக் கூட்டம் இந்திய நேரப்படி நேற்று (ஜூலை 19) மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

'ஜூம்' செயலி கூடல் மூலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் ஜெ.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த ஜான் தன்ராஜ் இணைப்புரை வழங்கினார்.

இதில், விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விசுவநாதன், பப்புவா நியூ கினியின் அமைச்சர் சசிதரன் முத்துவேல், மலேசியா நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர்கள், அடுத்த தலைமுறைக்கான உயர் கல்வியை கட்டமைப்பது குறித்து ஆக்கப்பூர்மான தங்களது கருத்துக்களை முன்மொழிந்தனர். குறிப்பாக, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் மனிதநேயமிக்க சமுதாயமாகவும் உருவாக்கும் வகையில் உயர் கல்வியை கட்டமைப்பது எப்படி, இனிவரும் காலங்களில் இணைய வழிக் கல்வியின் அவசியம், இணைய வழிக் கல்வி கிராமங்களுக்கும் சென்றடைவதற்கான நவீன கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மேலும், விவசாயக் கல்வியின் முக்கியத்துவம் அதில் உருவாக்க வேண்டிய நவீன கட்டமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அது சார்ந்திருக்கும் கிராமங்களை எவ்வாறு கல்வி சார்ந்து தத்தெடுப்பது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நன்னெறிக் கல்வியை போதிப்பதில் அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தொழில்நுட்ப ரீதியாக புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதன் அவசியம், பெண் கல்வியின் முக்கியத்துவமும் அதில் ஏற்படுத்த வேண்டிய கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்துக் கூட்டத்தில் பேசப்பட்டன.

தமிழின் தொன்மைகளை கண்டடைவதற்கு அதிகப்படுத்த வேண்டிய அகழாய்வு ஆராய்ச்சிகள், அனைத்துத் துறை சார்ந்த சமுதாயத்திற்குப் பயனுள்ள புதிய ஆராய்ச்சி படிப்புகள், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் கீழ் அனைத்து நாடுகளிலும் உலக தமிழர் உயர்கல்வி மையம் உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கனடா ஏசிசிபி-யின் தலைவர் ஜான், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ மாரிமுத்து, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டி.எஸ்.என்.சாஸ்திரி, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், ஏடிஜிபியான எம்.ரவி ஐபிஎஸ், அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் ராஜேந்திரன், கொடைக்கானல் மதர் தெரசா பெண்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநாதன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மணிசங்கர், பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளிராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிச்சுமணி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், கல்வியாளர்கள் ரவி நாகராஜன் (அமெரிக்கா), முரளி ஸ்ரீநாராயணதாஸ் (கனடா), அ.ரா.சிவகுமாரன் (சிங்கப்பூர் ) ஆகியோரும் கலந்து கொண்டு அடுத்த தலைமுறைக் கல்வியை கட்டமைப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை பன்னாட்டு கவ்வியாளர்களைக் கொண்டு சனிக்கிழமை தோறும் பத்து வாரங்களுக்கு நடத்தத் திட்டமிட்டிருக்கிறது உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x